‘தண்ணீர் கேன் விற்று பிழைப்பு நடத்துகிறேன்’ ‘ரூட் தல’ மாணவர் !

0
‘ரூட் தல’ மாணவர்களின் மோதலை முற்றிலுமாக தடுக்கும் வகையில் சென்னையில் போலீசார் பல்வேறு நடவடிக்கை களை எடுத்துள்ளனர். மோதலில் ஈடுபடும் மாணவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களை கல்லூரியில் இருந்து இடைநீக்கம் செய்துள்ளனர்.
‘தண்ணீர் கேன் விற்று பிழைப்பு நடத்துகிறேன்’ ‘ரூட் தல’ மாணவர்



இதே போல முன்னாள் ‘ரூட் தல’ மாணவர் களை தேடி பிடித்து, அவர்களின் இன்றைய நிலைமையை அவர்களையே பேச வைத்து வீடியோ படமாக விழிப்புணர்வுக் காக போலீசார் வெளியிட்டு வருகிறார்கள்.

இந்த விழிப்புணர்வு வீடியோவில் முன்னாள் ‘ரூட் தல’ மாணவர் ஒருவர் தனது கண்ணீர் கதையை உருக்கமாக பேசியுள்ளார். 

அதன் விவரம் வருமாறு:-

நான் சென்னை பச்சையப்பன் கல்லூரியில் படித்தேன். அம்பத்தூரில் இருந்து மந்தைவெளி செல்லும் 41-டி வழித்தட பஸ்சில் நான் ‘ரூட் தல’யாக செயல்பட்டேன். 

எனக்கு பின்னால் எப்போதும் 50 மாணவர்கள் சூழ்ந்திருப் பார்கள். 3 வருட கல்லூரி வாழ்க்கையில் நான் ஹீரோவாக, கெத்தாக செயல்பட்டேன். பஸ் டிரைவர் - கண்டக்டர் பேச்சை காது கொடுத்து கேட்க மாட்டோம். 
அந்த வாழ்க்கை ஜாலியாக இருந்தது. நாங்கள் போகும் பஸ்சில் நாங்கள் தான் ‘மாஸ்’ஆக இருப்போம். எங்களை மீறி செல்லும் மாநிலக் கல்லூரி, நந்தனம் கலைக் கல்லூரி மாணவர்களை அடித்து உதைப்போம்.

எனது குடும்பம் மிகவும் ஏழ்மையானது. எனது தந்தை மாற்றுத் திறனாளி. தாயார் கூலி வேலை செய்தார். அந்த வருமானத்தில் தான் என்னை படிக்க வைத்தனர். 

3 மாணவர்களை அடித்து உதைத்த சம்பவத்தில் டி.பி.சத்திரம் போலீசார் என் மீது வழக்குப் போட்டு கைது செய்து சிறையில் அடைத்தார்கள். நான் சிறையில் இருக்கும்போது சக மாணவர்கள் யாரும் என்னை பார்க்க வரவில்லை. உதவிக்கும் வரவில்லை. 

எனக்காக என் பெற்றோர் தான் கதறி அழுதார்கள். 9 நாட்கள் சிறையில் இருந்தேன். அப்போது தான் எனது நிலையை உணர்ந்தேன். 3 வருடங்கள் ஹீரோவாக இருந்தேன். அது பெரிய விஷயமாக எனக்கு அப்போது தெரிந்தது. 

கல்லூரியில் இருந்து வெளியே வந்த பிறகு தான், என்னைப் பற்றி எனக்கு புரிந்தது. என் மீதுள்ள வழக்கு என்னை பின் தொடர்ந்தது. நான் போலீஸ் வேலைக்கு தேர்வானேன். எழுத்து மற்றும் உடல் தேர்வில் வெற்றி பெற்றேன். 



ஆனால் என் மீதுள்ள வழக்கு எனக்கு வேலை கிடைப்பதற்கு தடையாக இருந்தது. வேலை பார்க்க வேண்டிய நான் குற்றவாளி யாக நின்றேன். எனது நிலையை நினைத்து கண்ணீர் வடித்தேன். 3 வருடமாக என்னை ஹீரோவாக பார்த்தவர்கள் எல்லாருமே, அப்போது காணாமல் போய்விட்டார்கள்.

என்னை ஜீரோ ஆக்கி விட்டு அவர்கள் எங்கோ ஹீரோவாக இருக்கிறார்கள். எனது கனவு தகர்ந்து போனது. இப்போது தண்ணீர் கேன் விற்பனை செய்து பிழைப்பு நடத்தி வருகிறேன். என்னை போல இப்போது ‘ரூட் தல’யாக செயல்படும் மாணவர்கள் எனது வாழ்க்கையை நினைத்து பாருங்கள். 
இதை அறிவுரையாக சொல்லவில்லை. அனுபவத்தில் சொல்கிறேன். ‘ரூட் தல’யாக மாறி உங்கள் வாழ்க்கையை கெடுத்து கொள்ளாதீர்கள். இவ்வாறு அவர் வீடியோவில் பேசியுள்ளார்.

வீடியோவில் அவரது முகம் தெரியாமல் மறைக்கப் பட்டுள்ளது குறிப்பிடத் தக்கது. விழிப்புணர்வுக் காக இந்த வீடியோ காட்சியை வெளி யிட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings