ஒடிசாவில் ஆசிரியை ஒருவர் தினமும் கழுத்தளவு தண்ணீரை கடந்து பள்ளிக்கு சென்று வருவது ஆச்சரியத்தை ஏற்படுத்தி யுள்ளது.
ஒடிசா மாநிலம் தென்கால் மாவட்டத்தில் உள்ள ஆரம்ப பள்ளி ஒன்றில், பினோதினி சமல் (49) என்பவர் ஒப்பந்த ஆசிரி யையாக பணிப்புரிந்து வருகிறார்.
இப்பள்ளியில் 53 மாணவர்கள் பயின்று வருகின்றனர். இவர் கடந்த 2008ஆம் ஆண்டு முதல் இங்கு ஒப்பந்த ஆசிரியராக பணிப்புரிந்து வருகிறார்.
இவர் தினமும் பள்ளிக்கு சப்புவா நதியை கடந்து தான் செல்ல வேண்டும். இந்த நதியில் கழுத்து அளவிற்கு தண்ணீர் இருந்தாலும் இதனை கடந்து தினமும் வந்து பள்ளியில் பணிப் புரிகிறார்.
ஏனென்றால் இந்த இடத்தில் ஒரு 40 அடி பாலம் கட்ட திட்டம் தீட்டப்பட்டது. அந்தப் பாலம் இன்னும் கட்டி முடிக்கப்பட வில்லை. இதனால் தினமும் ஆற்றுக்குள் இறங்கி தான் கடக்க வேண்டிய சூழல் உள்ளது.
இவரின் இந்தச் செயல் அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது. இது குறித்து சமல், “எனக்கு எப்போதும் பணிதான் முக்கியம். நான் பள்ளிக்கு வராமல் வீட்டில் உட்கார்ந்து என்ன செய்யப் போகிறேன்?.
எப்போதும் என் பள்ளியின் பீரோவில் கூடுதலாக ஒரு சேலையை வைத்திருப்பேன். ஆற்றை கடுக்கும் போது என் கைப்பேசி மற்றும் சில முக்கியமான பொருட்களை பிளாஸ்டிக் பையில் வைப்பேன்.
வீட்டிற்கு செல்லும் போதும் இதையே செய்வேன். இதனால் எனக்கு பல முறை உடல் சரியில்லாமல் போனாலும் நான் விடுப்பு எடுத்ததில்லை.
இரண்டு வருடங்களுக்கு முன்பு, நான் ஆற்றைக் கடக்கும் போது தண்ணீரின் வேகத்தில் தடுமாறி விழ இருந்தேன். ஆனால் சுதாரித்து கொண்டு சரியான இடத்தை தேர்ந்தெடுத்து பத்திரமாக சென்றேன்.
பணியில் சேர்ந்த போது எனக்கு சம்பளம் 1700 ரூபாய். அது தற்போது உயர்ந்து 7000 ரூபாயாக உள்ளது. எனினும் 8வருடம் முடிந்த பிறகு எனக்கு நிரந்திர ஆசிரியர் பணி கிடைத்திருக்க வேண்டும்.
இதுவரை கிடைக்க வில்லை” எனத் தெரிவித்தார். இது குறித்து அப்பகுதி யின் தலைவர் தாமோதர் பிரதான் கூறும்போது, “எங்கள் பகுதியில் வசிக்கும் மாணவர்கள் கூட பள்ளிக் கூடத்திற்கு செல்லாமல் விடுப்பு எடுப்பார்கள்.
ஆனால் பினோதினி விடுப்பு எடுத்து பார்த்தே இல்லை. இவர் ஆசிரியர் பணியின் மீது கொண்டுள்ள ஆர்வம் மற்றும் ஈடுபாட்டிற்கு சிறப்பு விருதே வழங்க வேண்டும்.
எந்த ஆண் ஆசிரியரும் செய்ய பயப்படும் செயலை இவர் தினமும் செய்து வருகிறார்” எனக் கூறினார்.
Thanks for Your Comments