நந்தா பட பாணியில் கொள்ளை - ஆடிட்டர் வீட்டில் புகுந்த திருடர்கள் !

0
‘நந்தா’ திரைப்படம் பாணியில் ஆடிட்டர் வீட்டில் குத்தாட்டம் போட்டு கொள்ளை யடித்த 2 திருடர்களுக்கு பொது மக்கள் தர்மஅடி கொடுத்தனர். இச்சம்பவம் தாம்பரம் அருகே பரபரப்பை ஏற்படுத்தியது. 
நந்தா பட பாணியில் கொள்ளை


தாம்பரம் அருகே ஒரத்தூர் ஊராட்சி, நீடாமங்கலம் கிராமம், எம்ஜிஆர் தெருவை சேர்ந்தவர் சீனிவாசன் (68). ஓய்வுபெற்ற ஆடிட்டர்.

இவரது மனைவி ஜெயந்தி (54). இவர்களது மகன் திருமணமாகி டெல்லியில் குடும்பத்துடன் வசிக்கிறார். 

மகனை பார்ப்பதற்காக கடந்த 3 நாட்களுக்கு முன் சீனிவாசன், மனைவியுடன், டெல்லிக்கு சென்றார். 

நேற்று முன்தினம் இரவு 10 மணியளவில் சீனிவாசனின் வீட்டில் விளக்குகள் எரிந்து கொண்டிருந்தது. டிவியில் பாடல் ஓடும் சத்தம் கேட்டது.

இதனால், சந்தேக மடைந்த அக்கம் பக்கத்தினர் சீனிவாசன் வீட்டிற்கு சென்று ஜன்னல் வழியாக எட்டி பார்த்தனர். 

அப்போது, ‘நந்தா திரைப்படம் கருணாஸ் பாணியில்’ வீட்டிற்குள் 2 பேர் டிவியில் வரும் பாடலுக்கு பிரிட்ஜில் இருந்த கூல்டிரிங்க்ஸை குடித்தபடி குத்தாட்டம் போட்டு கொள்ளையடித்த பொருட்களை ஒரு மூட்டையில் கட்டி கொண்டு இருந்தனர். 

இதை கண்டு அதிர்ச்சி யடைந்த அவர்கள், உடனடியாக கதவின் வெளிப்பக்கம் பூட்டிவிட்டு போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். 

பொது மக்கள், தங்களை வீட்டின் உள்ளே வைத்து பூட்டியதால் அதிர்ச்சி யடைந்த மர்மநபர்கள், அங்குள்ள படுக்கை யறையில் புகுந்து கொண்டு கதவை தாழ்ப்பாள் போட்டு கொண்டனர்.

சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த மணிமங்கலம் போலீசார் வீட்டிற்குள் சென்றனர். அங்கு, மர்மநபர்கள் கொள்ளை யடித்த பொருட்களை மூட்டையில் கட்டி வைத்திருந்தனர். 

அறையில் இருந்த கொள்ளையர் களை பிடித்து வெளியே போலீசார் அழைத்து வந்தனர். 

அவர்கள் வெளியே வந்ததும், அங்கிருந்த பொது மக்கள் சுமார் 100 பேர், அவர்களை சுற்றி வளைத்து கட்டை, கிரிக்கெட் மட்டையால் தர்மஅடி கொடுத்தனர். அதில், ஒருவனுக்கு மண்டை உடைந்தது.

பொது மக்கள் பிடியில் சிக்கிய திருடர்களை மீட்டு படப்பையில் உள்ள ஒரு மருத்துவ மனையில் போலீசார் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளித்து, காவல் நிலையம் கொண்டு சென்றனர். 


விசாரணையில், செம்மஞ்சேரியை சேர்ந்த ஆனந்த் (41), ரமேஷ் (27) என்பதும், பூட்டி யிருக்கும் வீடுகளில் புகுந்து கொள்ளை யடிப்பதை தொழிலாக கொண்டவர்கள் என்பதும் தெரிந்தது. 

இதற்கிடையில் கொள்ளை சம்பவம் குறித்து சீனிவாசனுக்கு தகவல் தெரிவிக்கப் பட்டது. உடனடியாக அவர் சென்னை திரும்பினார்.

பொதுமக்கள் கொடுத்த தகவலின் பேரில் மணிமங்கலம் போலீசார் ஆடிட்டர் வீட்டுக்கு வந்தனர். அவர்களிடம் திருடர்கள், ‘‘சார் எங்களுக்கு சர்க்கரை வியாதி இருக்கு… 

ஆர்ட் அட்டாக் ஏற்கனவே வந்து இருக்கு… நீங்க அடிச்சா தாங்க முடியாது. நாங்கள் இங்கேயே செத்துடுவேன். வெளியே நிறைய கூட்டமா இருக்காங்க. 

அவங்க கையில கிரிக்கெட் பேட், ஸ்டெம்ப் எல்லாம் இருக்கு. எங்களை அடிப்பாங்க. அதனால், நாங்க செத்தாலும், இங்கேயே இருந்து சாகுறோம். 

வெளியே வரமாட்டோம்’’ என பிடிவாதம் பிடித்தனர். அவர்களிடம் சுமார் ஒன்றரை மணிநேரம் போலீசார் சமரசம் பேசி, வெளியே வரவழைத்தனர்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings