நாளை பொங்கல் பண்டிகை தொடங்குகிறது. ஜனவரி 14 - போகி பண்டிகை, ஜனவரி 15 - தைப் பொங்கல், ஜனவரி 16 - மாட்டுப் பொங்கல், ஜனவரி 17 - உழவர் திருநாள் என 4 நாட்கள் தொடர் பண்டிகை காலமாகும்.
இதையொட்டி பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங் களுக்கு அரசு விடுமுறை விடப்பட்டுள்ளது.
இதேபோல் தனியார் நிறுவனங்களும் விடுமுறை அறிவித்துள்ளன. எனவே வெளியூர்களில் வேலை செய்வோர் பொங்கல் பண்டிகையை கொண்டாடி மகிழ சொந்த ஊர்களுக்கு திரும்புவர்.
குறிப்பாக தலைநகர் சென்னையில் லட்சக் கணக்கான வெளிமாவட்ட, வெளிமாநில மக்கள் தங்கி வேலை பார்த்து வருகின்றனர்.
இவர்கள் சொந்த ஊர்களுக்கு செல்லும் வண்ணம் கடந்த 10ஆம் தேதி முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
இதையொட்டி கோயம்பேடு பேருந்து நிலையத்தில் 15 சிறப்பு முன்பதிவு கவுன்ட்டர்கள் அமைக்கப் பட்டுள்ளன. நாளை(ஜனவரி 14) வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.
* அண்ணா நகர் மாநகர போக்குவரத்து கழக பேருந்து நிலையம் - செங்குன்றம் வழியாக ஆந்திரா செல்லும் பேருந்துகள் இங்கிருந்து புறப்படும்.
* சைதாப்பேட்டை நீதிமன்றம் அருகே உள்ள பேருந்து நிலையம் - கிழக்கு கடற்கரை சாலை வழியாக புதுச்சேரி, கடலூர், சிதம்பரம் செல்லும் பேருந்துகள் இங்கிருந்து புறப்படும்.
* தாம்பரம் சானடோரியம் அறிஞர் அண்ணா பேருந்து நிலையம் - திண்டிவனம் வழியாக பண்ருட்டி, கும்பகோணம், தஞ்சாவூர் செல்லும் பேருந்துகள் இங்கிருந்து புறப்படும்.
* பூவிருந்தவல்லி பேருந்து நிலையம் - வேலூர் வழியாக ஆரணி, ஆற்காடு, வேலூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஓசூர் ஆகிய ஊர்களுக்கு செல்லும் பேருந்துகள் இங்கிருந்து புறப்படும்.
* கோயம்பேடு பேருந்து நிலையம் - திருச்சி, மதுரை, சேலம், திருநெல்வேலி, தூத்துக்குடி, நாகர்கோவில், கோயம்புத்தூர் உள்ளிட்ட மற்ற ஊர்களுக்கு செல்லும் பேருந்துகள் இங்கிருந்து புறப்படும்.
ஜனவரி 10ஆம் தேதி இன்று காலை 8 மணி வரை 8,984 பேருந்துகள் இயக்கப் பட்டுள்ளன.
இதில் 4.53 லட்சம் பேர் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்துள்ளனர். சிறப்பு பேருந்துகள் அதிகளவில் இயக்கப் பட்டதால் எளிதாக வெளியூர் களுக்கு பயணம் செய்ய முடிவதாக பொது மக்கள் கூறுகின்றனர்.
Thanks for Your Comments