சும்மா கிடந்த சங்கை ஊதிக் கெடுத்தானாம் ஆண்டி.. என்று கிராமப் புறங்களில் சொல்வார்களே. அது விஜய் விஷயத்தில் உண்மையாகி விட்டது.
அவர் பாட்டுக்கு வேலையை பார்த்துக் கொண்டிருந்த நிலையில் வருமான வரித்துறை சோதனை வந்து விஜய் ரசிகர்களை உசுப்பி விட்டு விட்டது..
இதில் இப்போது தேவை யில்லாமல் சிக்கிக் கொண்டிருப்பது பாஜக தான். ஒரு தனியார் டிவி நேர்காணலின் போது ஒரு ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி இப்படிச் சொன்னார்,
"ஒரு முக்கியப் புள்ளியை குறி வைத்து விட்டால் நேரடியாக அவரிடம் ரெய்டு போக மாட்டார்கள். மாறாக அவருடன் தொடர்புடைய சிலரிடம் ரெய்டு போவார்கள். அதன் பின்னர் அந்த முக்கியப் புள்ளியிடம் செல்வார்கள்.
இது தான் விஜய் விவகாரத்தில் நடந்துள்ளது. இந்த ரெய்டு விஜய்யைக் குறி வைத்து நடந்த ரெய்டு. ஆனால் அதில் வருமான வரித்துறை தோல்வியையே தழுவியுள்ளது" என்றார்.
இது உண்மை தான். காரணம், முதலில் அன்புச் செழியனிடம்தான் ரெய்டு நடந்தது. பிறகு ஏஜிஎஸ் நிறுவனத்திடம் போனார்கள். அப்படியே விஜய்யிடம் தாவினார்கள்.
படப்பிடிப்பு நடந்த இடத்திற்கே விரைந்து சென்ற வருமான வரித்துறையினர் உடனே வந்தாக வேண்டும் என்று வற்புறுத்தி ஏதோ கைது செய்தவரைப் போல விஜய்யை நடத்தி அவசரம் அவசரமாக சென்னைக்கு கொண்டு வந்தனர்.
அவசரம்
இந்த அளவுக்கு சென்னைக்கு அவசரம் அவசரமாக கொண்டு வந்துள்ளனரே, ஏதோ பெரிய அளவில் மோசடி நடந்திருக்கும் போல.
அதனால் தான் இப்படி அவசரம் அவசரமாக கொண்டு வந்துள்ளனர் என்று தான் அனைவரும் முதலில் நினைத்தனர். ஒட்டு மொத்த தமிழகத்தையும் இப்படி விஜய் பக்கம் திருப்பினார்கள்.
இதில் வசதியாக மக்களிட மிருந்து மறைக்கப் பட்ட விஷயம் என்ன வென்றால்.. ரஜினி காந்த்தின் பேட்டியால் எழுந்த சர்ச்சைகள்!
பறிமுதல்?
விஜய்யை வீட்டுக்குக் கொண்டு வந்தனர், ரெய்டு நடத்தினர், விசாரணை நடத்தினர். ஆனால் எதுவும் சிக்க வில்லை. ஒரு ரூபாய் பணம் கூட கூடுதலாக கணக்கில் வரவில்லை என்று பறிமுதல் செய்யப்பட வில்லை.
எந்த ஆவணமும் பறிமுதல் செய்யப்பட வில்லை. சிக்கிய பணம் அனைத்தும் அன்புச் செழிய னுடையது என்று வருமான வரித்துறையே கூறி விட்டது.
அதே போல ஏஜிஎஸ் நிறுவனமும் மோசடி செய்துள்ளதா என்பது தெளிவாக்கப் படவில்லை.
பக்கா பிளான்
விஜய்யிடம் இவ்வளவு வேகம் வேகமாக விசாரணை நடத்த வேண்டிய அவசியம் என்ன.. எதற்காக அவசரம் அவசரமாக அவரை சென்னை க்குக் கொண்டு வர வேண்டும் என்ற கேள்விகளுக்கு இதுவரை பதில் இல்லை.
எதுவுமே கிடைக்க வில்லை, எல்லாமே பக்காவாக இருக்கிறது என்றால் ஏன் இந்த அதி பயங்கர பரபரப்பு ரெய்டு என்பதற்கும் யாரிடமும் விளக்கம் இல்லை.
மொத்த டிவிகளும் விஜய் வீட்டு ரெய்டில் தான் மும்முரமாக இருந்தன என்பதும் இங்கே குறிப்பிடத் தக்கது.
அவசரம்
இந்த இடத்தில்தான் தேவை யில்லாமல் பாஜகவும் நுழைந்தது. அதாவது பாஜக தலைவர்கள் சிலர் குறிப்பாக எச் ராஜா போன்றோர் விஜய் பெரிய அளவில் மோசடி செய்து விட்டது போலவே பேச ஆரம்பித்து விட்டனர்.
அதேபோல அர்ஜூன் சம்பத்தும் விஜய்யை காட்டமாக விமர்சித்து டிவி டிபேட்டு களில் சூடாகப் பேசினார். ஒரு அமைச்சர் கூட விஜய் குறித்து கோபாவேசமாக பேசியதாகவும் தகவல்கள் வந்தன.
காய் நகர்த்துகிறதா?
இதை விட முக்கியமாக விஜய்யின் படப்பிடிப்பு நடைபெறும் என்எல்சி சுரங்கம் முன்பு பாஜகவினர் சிலர் கூடி போராட்டமும் நடத்தினர்.
அது மத்திய அரசின் நிறுவனம், அந்த நிறுவனம் முறையாக அனுமதியும், பாதுகாப்பும் கொடுத்து தான் ஷூட்டிங் நடக்கிறது என்று தெரியாமலேயே இந்தப் போராட்டத்தை நேற்று பாஜகவினர் நடத்தினர்.
இதை யெல்லாம் கூட்டிக் கழித்துப் பார்க்கும் போது விஜய்யை பாஜக தான் குறி வைத்து காய் நகர்த்துகிறதோ என்ற சந்தேகம் யாருக்குமே வரத்தான் செய்யும்.
சந்தேகம்
ஆனால் தேவை யில்லாமல் விஜய்யை தொட்டு விட்டதா பாஜக என்ற கேள்வி எழுகிறது. ரஜினிகாந்த் போல விஜய்யையும் மடக்க பாஜக முயல்கிறதா என்ற கேள்வியும் எழுகிறது.
ஆனால் விஜய் இந்த இழுப்புக் கெல்லாம் வருவாரா என்பது கேள்விக்குறி தான். காரணம் அப்படி வருகிறவராக இருந்தால் அவரது படங்களில் அனல் பறக்கும் வசனங்கள் இடம் பெற்றிருக்காது..
ஏன் ஜிஎஸ்டி பற்றிப் பேசி யிருக்கவே மாட்டாரே.. எனவே விஜய் அப்படிப்பட்ட ஆள் இல்லை என்பது பாஜகவுக்கு தெரிந்திருக்க வேண்டும்.
இன்னொரு முகம்
இப்போது தேவை யில்லாமல் விஜய் ரசிகர்களை மொத்தமாக எழுச்சி பெற வைத்து விட்டது பாஜக. அது மட்டுமா.. மற்ற கட்சியினரின் ஆதரவையும் விஜய் பெற வழி செய்து விட்டது.
ஏற்கனவே ஏகப்பட்ட சிக்கல்களில் உள்ள பாஜகவுக்கு இது மேலும் கெட்ட பெயரையே பெற்றுத் தருமே தவிர வேறு எந்த லாபத்தையும் அது தராது.
அதைட விட முக்கியமாக ரஜினிக்கு ஒரு முகம், விஜய்க்கு இன்னொரு முகம் என்ற கெட்ட பெயரையும் பாஜக பெற்று விட்டது.
மொத்தத்தில் தேவை யில்லாமல் விஜய்யைத் தொட்டு விட்டது பாஜக.. இதன் விளைவு எப்படி இருக்கும் என்பது போகப் போகத் தெரியும்.