சீனாவின் வுஹான் நகரிலிருந்து பரவிய கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்தி வருகிறது.
வுஹான் நகரிலிருந்து தாயகம் திரும்பிய கேரளா மருத்துவ மாணவி உட்பட 3 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.
மூன்று பேரும் சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பிய நிலையில், இத்தாலியில் இருந்து டெல்லி வந்த ஒருவருக்கும்,
துபாயிலிருந்து தெலங்கானா வந்தவருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதை மத்திய அரசு உறுதி செய்தது.
இந்நிலையில், வைட்டமின் B1, B12 மற்றும் நுண்ணுயிர் எதிர்ப்பிகள் என செயலில் உள்ள மருந்துப் பொருட்களின் ஏற்றுமதியை வெளிநாட்டு வர்த்தக இயக்குனரகம் தடை செய்துள்ளது.
பாராசிட்டமால், எரித்ரோமைசின் உள்ளிட்ட 26 வகையான மருந்துகள் இதில் அடங்கும்.
இந்தியாவில் இரண்டு பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டிருக்கும் நிலையில், இந்த தடை உடனடியாக நடைமுறைக்கு வருவதாக வெளிநாட்டு வர்த்தக இயக்குனரகம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் இந்த மருந்துகளுக்கு தேவை அதிகரித்திருக்கும் நிலையில் சீனா உள்ளிட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி நிறுத்தப் படுகிறது.
இதனிடையே, கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் நொய்டாவில் உள்ள பள்ளி ஒன்றில் நடைபெற்ற பிறந்த நாள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதால் அப்பள்ளி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.