தமிழகத்தில் முதல் முறையாக காணொலிக் காட்சி மூலம் ஒரு முன்மாதிரி திருமணம் தஞ்சை மாவட்டம் பிள்ளையார் பட்டியில் இன்று நடைபெற்றது.
கொரோனா வைரஸ் வேகமாக பரவிவரும் சூழலில் அதனை கட்டுப்படுத்தும் நோக்கில் நாடு தழுவிய அளவில் ஊரடங்கை அமல்படுத்தி யுள்ளது மத்திய அரசு.
இந்த பொது முடக்கத்தால் திருமணம் உள்ளிட்ட சுபநிகழ்ச்சிகள் அனைத்தும் கடந்த ஒரு மாதகாலமாக பெரியளவில் நடைபெறவில்லை.
ஏற்கனவே திருமணத்திற்கு தேதி குறித்திருந்தவர்கள் கூட கொரோனா பதற்றம் தணிந்த பின்னர் திருமண விழாவை நடத்திக் கொள்ளலாம் என எண்ணி ஒத்தி வைத்த நிகழ்வுகளும் தமிழகத்தில் நடைபெற்றுள்ளன.
இந்நிலையில் அசாதாரண சூழலை கூட தகவல் தொழில் நுட்பத்தின் உதவியை கொண்டு மிக லாவகமாக கையாண்டு தஞ்சையில் ஒரு முன்மாதிரி திருமணத்தை நடத்தியுள்ளார்கள்.
பெரியார் மணியம்மை பல்கலைக்கழக பேராசிரியை வளர்மதி தனது மகள் வெண்பாவுக்கு இன்று திருமணம் நடத்துவ தற்காக
கடந்த 2 மாதங்களு க்கு முன்பே தேதி குறித்து அதற்கான அழைப்பிதழ்களை உற்றார் உறவினர் களுக்கு அனுப்பி வைத்திருந்தார்.
இந்நிலையில் எதிர் பார்க்காத வகையில் இரண்டாம் கட்டமாக மே 3-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப் பட்டதால் மகளின் திருமணத்தை ஜூம் செயலி மூலம் நடத்துவது என முடிவெடுத்தார்.
இதற்கு புதுச்சேரியை சேர்ந்த மணமகன் சந்திரபாண்டியன் குடும்பத்தினரும் ஒப்புக் கொண்டதால் எளிமையான முறையில் சமூக விலகலை கடைபிடித்து இன்று இனிதே திருமணம் நடைபெற்று முடிந்தது.
மணமக்களுடன் இரு குடும்பத்தினர் சார்பில் 5 பேர் மட்டுமே உடன் இருக்க, மற்ற உற்றார் உறவினர்கள் அனைவரும் ஜூம் செயலி மூலம் இணைந்து காணொலி காட்சியில் திருமணத்தை கண்டு மகிழ்ந்து புதுமண ஜோடிக்கு வாழ்த்துக் கூறினர்.
காணொலிக் காட்சி வாயிலாக திராவிடர் கழக பொதுச்செயலாளர் கலி. பூங்குன்றன் திருமணத்தை தலைமையேற்று நடத்தி வைத்த நிலையில், திராவிடர் கழகத்தலைவர் கி.வீரமணி வாழ்த்துரை வழங்கினார்.
நெருக்கடியான காலகட்டத்தில் புதுமையான யோசனை மூலம் திருமண விழாவை நடத்தி முடித்த மனமக்கள் குடும்பத்தினருக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.