ஊரடங்கு எதிரொலியால் மதுக்கடைகள் மூடப்பட்ட நிலையில் கடைக்குள் புகுந்து 78 மதுபாட்டில் களை எலிகள் குடித்து காலி செய்து விட்டதாக திருமலையில் உள்ள மதுக்கடை கண்காணிப்பாளர் ஒருவர் கூறியுள்ளார்.
கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல் படுத்தப்பட்டது. இதனால் மதுக்கடைகள் மூடப்பட்டு உள்ளது.
இந்நிலையில் கள்ளச் சந்தையில் மது விற்பனை நடைபெறுவ தாகவும், இதற்கு மதுக்கடை கண்காணிப்பாளர் களுக்கும் தொடர்பு இருப்பதாகவும் தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்து வந்தது.
எனவே ஆந்திரா மாநில அரசு மதுக்கடைகள் மற்றும் பார்களில் ஊரடங்கு உத்தரவுக்கு முன்பு கடையில் எவ்வளவு இருப்பு இருந்தது?
தற்போது எவ்வளவு உள்ளது? என்பது குறித்து கணக்கெடுக்க உத்தரவிட்டது. இதன் காரணமாக ஆந்திர மாநில கலால் துறை போலீசார் மதுக்கடைகள் மற்றும் பார்களில் சோதனை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், பிரகாசம் மாவட்டம், அந்தங்கி மண்டலத்தில் 30 மதுக்கடைகள் உள்ளது. இதில் 13 கடைகளில் இருப்பை காட்டிலும் மதுபாட்டில்கள் குறைவாக இருப்பது கண்டுபிடிக்கப் பட்டது.
மேலும், இதில் ஒரு கடையில் 78 மதுபாட்டில் களை எலிகள் கடித்து மதுபானங் களை குடித்து விட்டதாக கண்காணிப்பாளர் கூறிய தகவலால் பரபரப்பு ஏற்பட்டது.
இதை தொடர்ந்து மதுக்கடை கண்காணிப்பாளர் பணியில் அலட்சியமாக இருந்ததாக கூறி அவரிடம் எலிகள் கடித்து குடித்ததாக கூறப்பட்ட மதுபாட்டில் களுக்கான பணத்தை அரசுக்கு செலுத்தும்படி அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும், கள்ளச்சந்தையில் விற்பனை செய்யப் பட்டதை மறைக்க ஆளுங்கட்சி யினர் மதுபானங்களை எலி குடித்து விட்டதாக நாடகம் நடத்துவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றனர். தினகரன்