கொல்கத்தா, ஹவுராவைச் சேர்ந்தவர் கொரசா பேகம் (40). இவரின் முதல் கணவரின் மகன் அக்ரம் மல்லிக் (22), மகள் மஹிதா பாசும் (14).
முதல் கணவரைப் பிரிந்த கொரசா பேகம், 2-வதாக மக்ஃபுல் அலி சர்தார் (40) என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
கொல்கத்தாவி லிருந்து சில வருடங்களுக்கு முன் சென்னை வந்தனர். சென்னை மதுரவாயலை அடுத்த புளியம்பேடு மெயின் ரோடு, நூம்பல் பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்தனர்.
மக்ஃபுல் அலி சர்தார், தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். கொரசா பேகத்துக்கும் மக்ஃபுல் அலிக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டது. அதனால் கடந்த ஒரு மாதமாக வீட்டுக்கு வராமல் மக்ஃபுல் அலி இருந்துள்ளார்.
இந்தநிலையில் கடந்த 7-ம் தேதி கதவைத் திறந்து வைத்து வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த கொரசா பேகம், அக்ரம் மல்லிக், மஹிதா பாசும் ஆகியோர் மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்தார் மக்ஃபுல் அலி சர்தார்.
பின்னர், அவர் கதவைப் பூட்டி விட்டு தப்பி ஓடி விட்டார். கீழ்ப்பாக்கம் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்ட கொரசா பேகம், அக்ரம் மல்லிக் ஆகியோர் உயிரிழந்தனர்.
மஹிதா பாசும் சிகிச்சை பெற்று வருகிறார். இதை யடுத்து கொலை முயற்சி வழக்கை கொலை வழக்காக மதுரவாயல் போலீஸார் மாற்றினர்.
தப்பிய ஓடிய மக்ஃபுல் அலி சர்தாரைப் பிடிக்க இன்ஸ்பெக்டர் ராதா கிருஷ்ணன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் செல்லதுரை, சுதாகர், கோபால், வேல்ராஜ் மற்றும் விஜி, பொக்கை, சிசிடிவி ஆபரேட்டர் பிரபு ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.
தனிப்படை போலீஸார் வீட்டி லிருந்து தப்பிய மக்ஃபுல் அலி சர்தார், எங்கு சென்றார் என்பதை சிசிடிவி கேமரா மூலம் கண்டறிந்து அவரை 6 நாள்களுக்குப் பிறகு கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மக்ஃபுல் சிக்கியது எப்படி என்று மதுரவாயல் போலீஸார் கூறுகையில், `தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்த மக்ஃபுல் அலி சர்தார், மனைவி, மகனை ஆகியோரை கொலை செய்து விட்டு சைக்கிளில் தப்பிச் செல்லும் காட்சிகள் சிசிடிவியில் பதிவாகியிருந்தன.
அவரின் செல்போன் ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டதால் சிக்னல் மூலம் அவரைக் கண்டறிய முடியவில்லை.
சிசிடிவி ஆபரேட்டர் பிரபு தான் சுமார் 200-க்கும் மேற்பட்ட சிசிடிவிக் களை ஆய்வு செய்து அவ்வப்போது எங்களுக்குத் தகவல் கொடுத்துக் கொண்டே இருந்தார்.
மதுரவாய லிலிருந்து சைக்களில் புறப்பட்ட மக்ஃபுல், பூந்தமல்லி, திருமழிசை, வெள்ளவேடு, பாரிவாக்கம் என ஒவ்வோர் இடமாகச் செல்வதை சிசிடிவி மூலம் கண்டறிந்தோம்.
அவரைப் பின் தொடர்ந்து தனிப்படை போலீஸாரும் சென்றனர். மக்ஃபுல் அலியை 30 கி.மீட்டருக்கு மேல் தேடி அலைந்திருப்போம்.
ஒரு கட்டத்தில் திருமழிசை பகுதியில் மக்ஃபுல், தனியார் நிறுவனத்துக்குள் செல்லும் சிசிடிவி பதிவு கிடைத்தது. அங்கு விசாரித்தபோது வேலை கேட்டுச் சென்ற தகவல் தெரிய வந்தது.
இதை யடுத்து மீண்டும் மக்ஃபுல்லை சிசிடிவி கேமரா உதவியோடு தேடினோம். அப்போது பூந்தமல்லி பைபாஸ் சாலையில் மக்ஃபுல் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
அதைப் பார்த்ததும் மக்ஃபுல் அலியை மடக்கிப்பிடித்து காவல் நிலையத்துக்கு அழைத்து வந்தோம். அவரிடம் விசாரித்த போது, `கொரசா பேகத்துக்கு மகன், மகள் இருந்த போதிலும் அவருக்கு நான் வாழ்க்கை கொடுத்தேன்.
அவர்களுக்காக நான் சம்பாதித்த பணத்தை செலவழித்தேன். ஆனால், ஊரடங்கு சமயத்தில் எனக்கு சாப்பாடு போடாமல் என்னை வீட்டை விட்டு விரட்டி விட்டனர்.
அந்த ஆத்திரத்தில் தான் மூன்று பேரையும் தீ வைத்து கொளுத்தினேன்' என்று கூறியுள்ளார். கொலை, கொலை முயற்சி வழக்குகளில் கைதாகியுள்ள மக்ஃபுல் அலி சர்தாரை 6 நாள்களாகத் தேடிப் பிடித்த தனிப்படை போலீஸாரை உயரதிகாரிகள் பாராட்டினர்.
`சிசிடிவி கேமரா மட்டும் இல்லை யென்றால் மக்ஃபுல் அலியைக் கைது செய்திருக்க முடியாது' என்றார் போலீஸ் உயரதிகாரி ஒருவர்.... விகடன்...