ஒரு உறுப்போ அல்லது கொழுப்பு திசுவோ சுற்றியுள்ள பலவீனப்பட்ட சதையின் மூலம் வெளியேறி வருவது ஹெர்னியா எனப்படும். இம்மாதிரி ஏற்படும் ஹெர்னியா பல பிரிவுபடும்.
ஹெர்னியா என்பதனை குடலிறக்கம் என்றே குறிப்பிடுகின்றனர். காரணம் மிகவும் பொதுவான குடலிறக்கம் அடிவயிற்றில் தான் ஏற்படுகின்றது.
அடி வயிற்று சுவரில் ஏற்படும் பலவீனத்தால் கொழுப்பு திசு அல்லது அடி வயிற்று உறுப்புகள் வெளி வருகின்றன.
நமது உள்ளுறுப்புகள் ஒரு தசை படலத்துக்குள்ளே பாதுகாப்பாக இருக்கும். இந்த தசை படலம் கிழிந்தால் உள்ளுறுப்புகள் வெளிவரும்.
உங்கள் வெளி ஷர்ட்டில் ஓட்டை இருந்தால் உள் பனியன் வெளி வரும் அல்லவா? அது போல் தான். தசை நார்கள் பலவீனம் அடைவதாலும் அல்லது பிறவியிலேயே தசையில் ஓட்டை இருப்பதாலும் ஹெர்னியா ஏற்படலாம்.
சிலருக்கு அறுவை சிகிச்சை செய்த பின் உள் தசைநார்கள் விலகும். இதனாலும் ஹெர்னியா ஏற்படலாம். மேலும் தொடர்ந்து இருமல், தும்மல் இருப்பது ஹெர்னியா பாதிப்பினை அதிகப்படுத்தும்.
தொடர்ந்து இருக்கும் மலச்சிக்கல் ஹெர்னியா பாதிப்பிற்கு ஒரு அடிப்படை காரணம் ஆகும்.
அதிக உடல் எடை, நிறைய குழந்தைகள் பெறுதல், அதிக நேரம் சைக்கிள் பிரயாணம் செய்தல், அதிக எடை தூக்குவது, பாரம் சுமப்பது இவையும் ஹெர்னியா ஏற்பட காரணம் ஆகின்றன.
இப்படி ஏற்படும் ஹெர்னியா
* தொப்புள் பகுதி
* வயிற்றின் முன் பகுதி
* ஆண் உறுப்பு அல்லது பெண் உறுப்பை நோக்கி
* தொடைமடிப்பு
* பழைய அறுவை சிகிச்சை செய்த இடம்
என பல இடங்களில் ஏற்படலாம்.