மதுரை ஜிஎச்-க்குள் புகுந்து முருகன் என்பவரை ஒரு கும்பல் படுகொலை செய்தது.. 10 இடத்தில் முருகனை கத்தியால் குத்த ஸ்கெட்ச் போட்டது ஒரு பெண் என்ற பகீர் தகவல் வெளியாகி உள்ளது...
எனினும் இது சம்பந்தமான உண்மை தன்மையை வெளிக்கொணர போலீசார் விசாரணையில் இறங்கி உள்ளனர். மதுரை கரும்பாலை பகுதியை சேர்ந்தவர் முருகன்.. 40 வயதாகிறது..
கல்யாணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். கடந்த 5-ம் தேதி பைக்கில் சென்று கொண்டிருந்த போது இவருக்கு விபத்து ஏற்பட்டு விட்டது.. முருகனின் கை எலும்பு முழுதுமாக முறிந்து விட்டது.
அதனால் தீவிர சிகிச்சைக் காக மதுரை ராஜாஜி அரசு ஆஸ்பத்திரியில் 101-வது வார்ட்டில் அனுமதிக்கப்பட்டார்.. தொடர்ந்து சிகிச்சையும் தரப்பட்டு வந்தது. இந்நிலையில் நேற்று காலை முருகன் தூங்கி கொண்டிருந்தார்..
அவருக்கு டீ வாங்கி தரலாம் என்று மனைவி கேன்டீனுக்கு போயிருந்தார்.. அந்த நேரம் பார்த்து 4 பேர் திடீரென முருகன் படுத்திருந்த ரூமுக்குள் நுழைந்தனர்..
எல்லார் கையிலும், கத்தி, அரிவாள் இருந்தன.. தூங்கி கொண்டிருந்த முருகனை சரமாரியாக வெட்டினர்.. தலை, கழுத்து மற்றும் மார்பில் என 10க்கும் மேற்பட்ட இடங்களில் கத்தியால் குத்தி விட்டு தப்பி ஓடி விட்டனர்.
இதை பார்த்த மற்ற நர்ஸ்கள், நோயாளிகள் அலறி அடித்து கொண்டு ஓடினர். ரத்த வெள்ளத்தில் முருகன் உயிருக்கு போராடினார்..
அவருடைய அலறலை கேட்டு டாக்டர்கள் ஓடி வந்து, அவரது உயிரை காப்பாற்ற எவ்வளவோ போராடியும், முடியவில்லை.. சிகிச்சை பலனின்றி உயிரிழந்து விட்டார்.
இது தொடர்பாக போலீசுக்கு தகவல் சொல்லப்பட்டு, அவர்களும் விரைந்து வந்தனர்.. முருகனின் சடலத்தை போஸ்ட் மார்ட்டம் செய்ய அனுப்பி வைத்து, இது தொடர்பான விசாரணையை மேற்கொண்டனர்.
உயிரிழந்த முருகனுக்கு நிறைய குற்ற பின்னணி உள்ளதாக கூறப்பட்டது.. ஏகப்பட்ட கொலை வழக்குகளிலும் தொடர்புடையவர் என்பதால், இவரை பற்றின விசாரணை துரிதமாகவே ஆரம்பமானது..
அதில், 6 மாதங்களுக்கு முன்பு வைகையாற்றில் கஞ்சா வியாபாரி பட்டா ராஜேந்திரன் என்பவரை கொலை செய்த வழக்கில், முருகன்தான் 2வது குற்றவாளி..
அதனால் பட்டா ராஜேந்திரன் மனைவி, தன் கணவனை கொலை செய்தவர்களை பழிவாங்க பிளான் செய்து கொண்டிருந்தாராம்.
அதன்படி, முதல் குற்றவாளியான சந்துரு என்பவர் மீது 3 மாசத்துக்கு முன்பு பெட்ரோல் குண்டு வீசி கொலை செய்ய முயற்சி நடைபெற்றது.. ஆனால் சந்துரு தப்பி விட்டார்..
அடுத்து முருகனுக்கு அந்த பெண்தான் ஸ்கெட்ச் போட்டுள்ள தாகவும் தெரிகிறது.. அதன்படி தான் நேற்று ஆஸ்பத்திரிக்குள் புகுந்து கும்பல் வெட்டி கொன்றதும் தெரிய வந்தது.
எனினும் இந்த தகவல் உண்மைதானா என்ற விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது.
அதே போல, ஆஸ்பத்திரியில் இருந்த சிசிடிவியில் கரும்பாலையை சேர்ந்த அருண் பாண்டியன், விக்னேஷ்வரன், கரன்ராஜ் ஆகியோருடன் மேலும் சிலர் சேர்ந்து இந்த கொடூர கொலையில் ஈடுபட்டதும் தெரிய வந்தது.
இப்போதைக்கு 5 பேர் கைதாகி உள்ளனர். இவர்கள் முருகனை கொலை செய்வதற் காக முதல்நாளே ஆஸ்பத்திரிக்கு வந்து நோட்டமிட்டும் சென்றுள்ளனர்.
இந்த தகவல் அறிந்ததுமே, தேவையில்லாமல் யாரையும் வார்டுக்குள் விட வேண்டாம் என்று முருகன் தரப்பில் ஆஸ்பத்திரி காவலாளியிடம் கேட்டுக் கொள்ளப்பட்டதாம்..
ஆனால் விடிகாலை வந்த கும்பலானது, காவலாளியையும் கத்தியால் காட்டி மிரட்டிதான் வார்டுக்குள் நுழைந்துள்ளது...
இந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆதாரமாக கொண்டு சம்பந்தப்பட்ட அனைவரையும் கைது செய்துள்ள போலீசார் தொடர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.