பிகில் படத்துக்குப் பிறகு மாநகரம் பட இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்துள்ளார் விஜய்.
மாஸ்டர் என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்துக்கு இசை – அனிருத். மாஸ்டர் படத்தில் விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், சாந்தனு, ஆண்ட்ரியா போன்றோர் நடித்துள்ளார்கள்.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, திரைப்படப் படப்பிடிப்புகள் அனைத்தும் தற்போது ரத்து செய்யப் பட்டுள்ளன. திரையரங்குகளும் இயங்க வில்லை. இதனால் மாஸ்டர் படத்தின் வெளியீடு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்தப் படத்தின் திரைக்கதையில் இயக்குநர் ரத்னகுமாரின் பங்களிப்பும் உள்ளது. மேயாத மான், ஆடை படங்களை அவர் இயக்கியுள்ளார்.
மாஸ்டர் படம் பற்றி ரத்னகுமார் அளித்த பேட்டியில் கூறியதாவது:
மாஸ்டர், விஜய்யின் வழக்கமான படம் கிடையாது. ஆனால் விஜய்யைக் கொண்டாடும் படமாக இருக்கும், அந்தக் கொண்டாட்டமும் கதைக்கு உட்பட்டதாகவே இருக்கும்.
படப்பிடிப்பில் முதல் இரு நாள்களுக்கு விஜய் சாருக்கு வசனங்களே இல்லை. கதாபாத்திரத்தின்படி சமையல் வேலை செய்வது, பாடல் கேட்பது, விளையாடுவது என்று மட்டும் செய்து வந்தார்.
தனிப்பட்ட முறையில் விஜய் எப்படி இருப்பாரோ அதே போல தான் அவருடைய மாஸ்டர் பட கதாபாத்திரமும் அமைந்துள்ளது. புதிய மனோபாவத்துடன் உள்ள விஜய்யை மாஸ்டரில் காண முடியும்.
சமுதாயப் பொறுப்புள்ள படம், மாஸ்டர். பாடல்களிலேயே உபயோகமான கருத்துகள் உள்ளதாக ரசிகர்கள் எண்ணி யுள்ளார்கள். கதாபாத்திரம் வாழும் விதத்தில் படத்தின் கதை அமைந்துள்ளது.
ஆனால் நீளமான பிரசாரங்கள் இருக்காது. விஜய் சேதுபதி படத்துக்குள் வந்தபிறகு காட்சிகள் எல்லாம் நாங்கள் எண்ணியதை விடவும் பெரிதாக மாறி விட்டன.
ஒரு சாதாரண தொலைப்பேசி உரையாடல் திடீரென முக்கியத்துவம் பெற்று விட்டது. எந்தெந்த காட்சிகளைப் படத்தில் தக்கவைப்பது, வெட்டுவது எனக் குழப்பம் வந்து விட்டது.
சிறிய காட்சிகள் கூட ஜாலியாக அமைந்து விட்டன. அதே சமயம் படத்தின் நீளத்தையும் நாங்கள் கருத்தில் கொள்ள வேண்டும். மனசே இல்லாமல் தான் சில காட்சிகளை வெட்டவேண்டிய நிலைமை வந்தது.
இன்னும் பத்து நாள்கள் இருந்திருந்தால் மாஸ்டர் படத்தின் ஒட்டுமொத்த பணிகளும் முடிந்திருக்கும்.
தணிக்கைக்குப் படத்தை அனுப்ப நாங்கள் தயாராக இருந்த நிலையில் ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வந்தது. எப்போது படம் வந்தாலும் கொண்டாட்டமாக இருக்கும் என்று கூறியுள்ளார்.