கொரோனா வைரஸை மாய, மந்திரத்தால் குணப்படுத்துவதாக கூறி பல லட்சம் ரூபாய் மோசடி செய்த கொரோனா பாபாவை ஐதராபாத் போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
தெலுங்கானா மாநிலம் ஐதாராபாத்தில் இஸ்மாயில் பாபா என்பவர் மாய, மந்திரங்கள் மூலம் கொரோனாவை குணப்படுத்துவதாக கூறி ஒரு நோயாளிக்கு 40 ஆயிரம் ரூபாய் முதல் 50 ஆயிரம் ரூபாய் வரை கட்டணம் வசூலித்திருக்கிறார்.
காய்ச்சல், சளி, இருமல் ஆகிய அறிகுறிகளுடன் வருபவர்களுக்கு மந்திரங்கள் செய்து, எலுமிச்சைப்பழம் மற்றும் விபூதி வழங்கி அப்பாவி மக்களை நம்ப வைத்து அவர் ஏமாற்றி வந்திருக்கிறார்.
மேலும் இந்த மருந்து தாயத்துகளை உபயோகிப்பதன் மூலம் கொரோனா அருகிலேயே வராது என்றும் அவர் உரைத்துள்ளார்.
கொரோனா தொற்றுக்காக முகக்கவசம் அணிய வேண்டாம் என்று அவரது ஆதரவாளர்கள் பிரச்சரம் வேறு செய்து வந்தனர்.
இந்நிலையில் பணத்தை பெற்று கொண்டு மருந்து எதுவும் கொடுக்காததால் ஏமாற்றப்பட்டோம் என்று உணர்ந்த பாதிக்கப்பட்ட மக்கள் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தனர்.
தொடர்ந்து, கொரோனா பாபாவிடம் பொதுமக்கள் அதிகளவில் செல்வதை போலீசார் கண்காணித்து வந்தனர். அதில் 70க்கும் மேற்பட்ட மக்களிடம் கொரோனா பாபா பல லட்சம் ரூபாய் வசூலித்தது தெரிய வந்தது.
இதை யடுத்து அவரை மியாப்பூர் போலீசார் கைது செய்துள்ளனர். பின்னர், கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனைக்கு செல்ல வேண்டும் என்றும்,
இப்படிப்பட்ட போலி பாபாக்களை நம்ப வேண்டாம் என்றும் மாய, மந்திரங்களால் கொரோனா வைரஸ் போகாது என்றும் போலீசார் அங்குள்ள மக்களிடம் எடுத்துரைத்தார்கள்.