இதுவரை கொரோனா வைரஸை அழிக்க மருந்து ஏதும் கண்டு பிடிக்கவில்லை. இந்த வைரஸால் இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை மிகவும் மோசமாக அதிகரித்து வருகிறது.
இந்த கொடிய வைரஸை அழிப்பதற்கு உலகெங்கிலும் உள்ள மருத்துவர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் அயராது முயற்சித்து வருகின்றனர்.
இந்த சமயத்தில் இந்த வைரஸிற்கான தடுப்பு மருந்து கண்டுபிடிப்பின் முதல் முன்னேற்றமாக, இந்த வைரஸால் ஏற்படும் இறப்பு அபாயத்தைக் குறைக்கும் மருந்து கண்டுபிடிக்கப்பட்டிருப்பது மனதிற்கு மகிழ்ச்சியை அளிக்கிறது.
இன்று வரை உலகெங்கிலும் 8, 393, 096 பேர் கொரோனாவால் பாதிக்கப் பட்டுள்ளனர். சுமார் 450, 452 பேர் கொரோனா வைரஸால் இறந்துள்ளனர். இந்தியாவில் நிலைமை மோசமாகிக் கொண்டிருக்கிறது.
பல பகுதிகளில் இந்த தொற்றுநோயைக் குணப்படுத்து வதற்கான சோதனைகள் நடந்து வருகின்றன. சிலர் மனித சோதனைகளின் கட்டத்திற்கு முன்னேறியுள்ளனர்.
இருப்பினும், சந்தையில் இதற்கான தடுப்பூசி வருவதற்கு இன்னும் சில காலம் ஆகும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
தற்போதைய கொரோனா வைரஸிற்கு எதிரான போராட்டத்தில் ஆக்ஸ்போர்டு விஞ்ஞானிகள் SARS-CoV-2 வைரஸால் ஏற்படும் நோயான COVID-19-க்கான முதல் உயிர் காக்கும் மருந்தை தாங்கள் கண்டுபிடித்துவிட்டதாக உறுதியாக கூறுகின்றனர்.
விலை மலிவான மருந்து
ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக ஆராய்ச்சி யாளர்களின் கூற்றுப்படி, டெக்ஸாமெதாசோன் ஒரு விலை மலிவான மற்றும் பரவலாக கிடைக்கக் கூடிய மருந்து.
இது மிகவும் கடுமையான சுவாச பிரச்சனைகளுடன் கொரோனா வைரஸ் தாக்கிய நோயாளிகளின் இறப்பு அபாயத்தைக் குறைக்கலாம்.
இந்த மருந்து கொரோனா வைரஸ் நோய்த் தொற்றுக்கான பல்வேறு வகையான சிகிச்சைகளை சோதிக்க நிறுவப்பட்ட RECOVERY சோதனையின் ஒரு பகுதியாகும்.
இந்த விலை மலிவான மருந்து வெண்டிலேட்டரில் உள்ள கொரோனா நோயாளிகளின் இறப்பை மூன்றில் ஒரு பங்கைக் குறைத்தது.
டெக்ஸாமெதாசோன் சிகிச்சை 10 நாட்கள் வரை கொடுக்கப்படும் மற்றும் ஒரு நோயாளிக்கு 5 பவுண்டுகள் வரை செலவாகும். எனவே ஒரு உயிரைக் காப்பாற்ற 35 பவுண்டுகள் வரை செலவாகும்.
டெக்ஸாமெதாசோன் - Dexamethasone
டெக்ஸாமெதாசோன் மருந்தானது முதன் முதலில் 1957 ஆம் ஆண்டு கண்டு பிடிக்கப்பட்டது.
இது ஒவ்வாமை/அழற்சி கோளாறுகள், சரும பிரச்சனைகள், பெருங்குடல் அழற்சி, ஆர்த்ரிடிஸ்/கீல்வாதம் மற்றும் சில வகையான புற்றுநோய்க்கான சிகிச்சையில் பயன்படுத்தப்படுகிறது.
மிகப்பெரிய சோதனை
RECOVERY சோதனையில் பணிபுரியும் விஞ்ஞானிகள், இந்த மருந்து வெண்டிலேட்டர்களில் உள்ள கொரோனா நோயாளிகளின் இறக்கும் அபாயத்தை மூன்றில் ஒரு பகுதியும், ஆக்ஸிஜன் உள்ளவர்களுக்கு ஐந்தில் ஒரு பகுதியும் குறைக்கும் என்கிறார்கள்.
மேலும் உலகின் மிகப்பெரிய சோதனையாக இதில் 11,500-க்கும் மேற்பட்ட நோயாளிகள் கொண்டு மேற்கொள்ளப்பட்டது.
இந்த சோதனையில் இங்கிலாந்தில் உள்ள 175-க்கும் அதிகமான மருத்துவ மனைகளில் இருந்து நோயாளிகள் சேர்க்கப்பட்டனர்.
பாதியாக குறையும் இறப்பு விகிதம்
இந்த சோதனையில் ஆராய்ச்சி யாளர்கள் கொரோனா நோயாளிகளுக்கு ஒரு நாளைக்கு ஒருமுறை 6 மிகி டெக்ஸாமெதாசோனை வழங்கினர்.
இந்த மருந்தை நோயாளிகளுக்கு வாய் வழியாகவோ அல்லது நரம்பு ஊசி மூலமாகவோ கொடுத்தார்கள்.
அதில் வெண்டிலேட்டரில் உள்ள நோயாளிகளுக்கு கொடுத்த மருந்தால், அவர்களின் இறப்பு அபாயம் 40 சதவீதத்தில் இருந்து 28 சதவீதமாக குறைந்திருப்பது தெரிய வந்தது.
அதேப் போல் ஆக்ஸிஜன் தேவைப்படும் நோயாளிகளின் இறப்பு அபாயம் 25 சதவீதத்தில் இருந்து 20 சதவீதமாக குறைந்தது.
முதல் மருந்து
மேலும் இந்த விஞ்ஞானிகள் கொரோனாவிற்கு எதிரான இந்த மருந்து உறுதியாக இறப்பு விகிதத்தைக் குறைக்கும் என்றும் கூறுகின்றனர்.
இதனால் கொரோனாவால் உயிர்வாழ்வதை இது மேம்படுத்தும். ஆக்ஸ்போர்டு விஞ்ஞானிகள் தாங்கள் கொரோனாவிற்கு எதிரான மருந்தை கண்டுபிடித்து விட்டோம் என்று நினைத்து பெருமைக் கொள்கின்றனர்.
லேசான அறிகுறி உள்ளவர்களுக்கு உதவுமா?
டெக்ஸாமெதாசோன் மருந்து உலகளவில் கிடைக்கிறது மற்றும் சுகாதார வல்லுநர்கள் உடனடியாக கொரோனா நோயாளிகளுக்கு பயன்படுத்தி உயிர்களைக் காப்பாற்ற உதவலாம் என்றும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
குறிப்பாக கொரோனாவால் தீவிரமாக பாதிக்கப்பட்ட நோயாளிகளின் உயிரைக் காப்பாற்ற டெக்ஸாமெதாசோன் உதவும் என்பது RECOVERY சோதனையின் முடிவு என்பதையும் உறுதியாக கூறுகின்றனர்.
இந்த மருந்து விலை மலிவானதால் ஏழை நாடுகளில் அதிக கொரோனா வழக்குகளைக் கொண்டவர்களுக்கு இது பெரும் நன்மை பயக்கும் என்றும் விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.
இருப்பினும், இந்த மருந்து லேசான அறிகுறிகளைக் கொண்டவர்களுக்கு உதவுவதாக தெரியவில்லை.