ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் ஏர் உழுவதற்கு மாடுகளை வாங்க காசு இல்லாததால் விவசாயி ஒருவர் தனது இரு மகள்களையும் மாடுகள் போல் பூட்டி
ஏர் உழுத வீடியோ வைரலான நிலையில் அவருக்கு நடிகர் சோனு சூட் டிராக்டர் வாங்கி கொடுத்துள்ளார்.
இந்த டிராக்டரை பார்த்து விவசாயியின் குடும்பத்தினர் உருக்கமாக நன்றி தெரிவித்தனர். கொரோனா லாக்டவுனால் நாடே பொருளாதார சிக்கலில் சிக்கியுள்ளது.
அந்த வகையில் விவசாயிகள், தொழிலாளர்கள், வியாபாரிகள், வணிகர்கள் என பெரும்பாலானோர் நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகிறார்கள்.
இதனால் பலர் தங்களது தொழிலை மாற்றிக் கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் சித்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவர் தனது நிலத்தை உழுவதற்கு டிராக்டரை வாடகைக்கு வாங்கவோ
தொழிலாளர்களை பணியில் அமர்த்தவோ, மாடுகளை வாங்கவோ காசு இல்லாததால் அவரது இரு மகள்களையும் ஏரில் பூட்டில் உழுதுள்ளார்.
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் உள்ள மதனப்பள்ளியில் மார்புரியை சேர்ந்தவர் நாகேஸ்வர். இவர் மஹால்ராஜு பள்ளியிலிருந்து புலம் பெயர்ந்தவராவார்.
கடந்த 20 ஆண்டுகளாக இப்பகுதியில் வசித்து வரும் இவர் திருப்பதியில் டீக்கடை நடத்தி வந்த நிலையில் கொரோனா லாக்டவுனால் அந்த கடையில் வருமானம் ஈட்ட முடியாததால் விவசாயம் செய்ய முடிவு செய்தார்.
இவருக்கு உதவியாக அவரது மனைவி லலிதாவும், மகள்கள் வெண்ணிலா மற்றும் சாந்தனா ஆகியோர் உள்ளனர்.
2.5 ஏக்கர் நிலத்தில் பயிர் வைக்க ஏர் உழ வேண்டும். அதற்கு மாடுகளை வாங்கவோ டிராக்டரை வாடகைக்கு அமர்த்தவோ பணம் இல்லை.
இதனால் தனது இரு மகள்களையும் மாடுகளை போல் பூட்டி ஏர் உழுத சம்பவம் வைரலானது. படிக்க வைக்கக் கூட முடியாத அளவுக்கு வறுமை வாட்டுவதாகவும் தெரிவித்திருந்தனர்.
இந்த வீடியோவை பார்த்த பாலிவுட் நடிகர் நடிகர் சோனு சூட் அந்த குடும்பத்திற்கு உதவ முன் வந்தார் அவர் தனது ட்விட்டரில் கூறுகையில் ஏர் உழுவதற்கு நாளை காலை அவரது கையில் இரு காளைகள் இருக்கும்.
அந்த பெண்கள் கல்வியில் கவனம் செலுத்தட்டும், அவர்களை பாதுகாக்க வேண்டும் என சோனு சூட் கூறியிருந்தார்.
இந்நிலையில் சர்ப்பரைஸ் ஆக அந்த குடுமபத்திற்கு டிராக்டரை வீட்டிற்கு அனுப்பி வைத்தார். இதை பார்த்து அந்த குடும்பத்தினர் இன்ப அதிர்ச்சி அடைந்தனர்.
நடிகர் சோனு சூட் இந்த லாக்டவுனால் மும்பை உள்ளிட்ட நகரங்களில் சிக்கித் தவித்து வந்த தமிழகம், ஆந்திரம், கர்நாடகம் உள்பட பல்வேறு மாநிலங்களை சேர்ந்தவர்கள் சொந்த மாநிலம் செல்ல தேவையான உதவிகளை செய்து வருகிறார்கள்.
தற்போது அவர் விவசாயிக்கும் உதவி செய்வது அவரது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.