ஒரு விவசாயியை, நடுராத்திரி விசாரணைக்கு கூட்டிட்டு போனாங்களாம்.. திடீரென அவருக்கு நெஞ்சுவலி வந்து இறந்தும் விட்டாராம்.. ஆனால் உடம்பில் காயங்கள் இருக்கிறதாம்... எப்படி?
தென்காசி மாவட்டம் கடையம் அருகேயுள்ளது வாகைக்குளம் என்ற கிராமம்.. இங்கு வசித்து வந்தவர் அணைக்கரை முத்து.. இவர் ஒரு விவசாயி.. 65 வயசாகிறது.. சொந்தமாக நிலம், தோட்டம் வைத்திருக்கிறார்..
அந்த தோட்டத்தில் காய்கறிகளை பயிரிட்டிருந்தார். ஆனால் காட்டு பன்றிகள் தோட்டத்துக்குள் நுழைந்து இவரது பயிர்களை நாசம் செய்து விடுவதால், நிலத்தை சுற்றி மின்வேலி போட்டிருந்தார்...
இந்த மின்வேலியை அவர் வனத்துறையினர் அனுமதி இல்லாமல் போட்டு விட்டதாக புகார் போயுள்ளது. மேலும் இலவச மின்சாரத்தை தோட்டத்துக்கு பயன்படுத்தி கொண்டதாகவும் கூறப்படுகிறது.
இதை யெல்லாம் விசாரிக்க வனத்துறையினர் வந்துள்ளனர். பிறகு, இரவு 11.மணி அளவில் அணைக்கரை முத்து வீட்டுக்கு போய், அவரை ஜீப்பில் ஏற்றி கொண்டு, கடையத்தில் உள்ள வனத்துறை ஆபீசுக்கு சென்றுள்ளனர்.
அங்குதான் நள்ளிரவில் விசாரணை நடந்துள்ளது.. ஆனால் அவர் இறந்து விட்டார்.. அணைக்கரை முத்து எப்படி இறந்தார் என்றே தெரியவில்லை.. நெஞ்சுவலி என்று சொன்னாராம்..
அவரது உடம்பில் காயங்கள் இருந்தன என்று உறவினர்கள் சொல்கிறார்கள்.. வனத்துறையினர் தான் அடித்து கொன்று விட்டதாக சொல்லி மறியலும் செய்தனர்.
இந்த மறியல் விஷயத்தை கேள்விப்பட்டு, எம்எல்ஏ பூங்கோதை அங்கே வந்து விட்டார்.. உறவினர் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தார்.. உடனடியாக அதிகாரிகள் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர்..
வனத்துறையினர் 4 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அம்பாசமுத்திரம் மாஜிஸ்திரேட் கார்த்திகேயன் விசாரணை நடத்தினார்...
உயிரிழந்த அணைக்கரை முத்து உடலில் இருந்த காயங்களையும் அவர் பார்வையிட்டார்... இப்போது அணைக்கரை முத்து உடல் போஸ்ட் மார்ட்டம் செய்ய அனுப்பப்பட்டுள்ளது..
அந்த ரிசல்ட் வந்தால் தான் அடுத்து என்ன நடவடிக்கை என்பது தெரிய வரும். தமிழ்நாட்டில் பெரும்பாலான விசாரணைகள் நடு ராத்திரிகளிலேயே ஏன் நடக்கின்றன?
ஸ்டேஷனுக்கு விசாரணைக்கு போகிறவர்களுக்கு மட்டும் நெஞ்சுவலி எப்படி திடீரென வருகிறது என்ற மாய, மந்திரம் மட்டும் நமக்கு புரியவேயில்லை!