குழந்தைப்பேறை இழக்கும் இளம்பெண்கள் !

‘நம்ம ஊரில் பாதிக்குப் பாதி பெண்கள், இயல்பை விட சீக்கிரமாகவே தாய்மையடையும் தகுதியை இழந்து விடுகிறார்கள்’ என்று அதிர்ச்சி ஸ்டேட்மென்ட் விட்டிருக்கிறது பெங்களூரைச் சேர்ந்த ஒரு அமைப்பு .

அதாவது, 40 - 45 வயதில் ஏற்படும் மெனோபாஸ் நிலை, இன்றைய பெண்களுக்கு 30 - 35 வயதிலேயே ஏற்பட்டு விடுகிறதாம். குழந்தைகள் மற்றும் பெண்களின் ஆரோக்கியத்துக்காக இயங்கி வரும் ‘சத்வம்’ என்ற அந்த அமைப்பு, 

கடந்த 5 வருடமாக 900 பெண்களைப் பரிசோதித்து இந்த முடிவைச் சொல்லியிருக்கிறது. நவீனம் என்ற பெயரில் வாழ்க்கைச் சூழல், நம் ஆரோக்கியத்தைப் பதம்பார்ப்பது அறிந்தது தான்.

வரப்போகும் சந்ததிகள் வரை அதன் விஷக்கரம் நீள்வதின் அறிகுறியா இது? மகப்பேறு மருத்துவரான கமலா செல்வராஜிடம் பேசினோம்... ‘‘பி.ஓ.எஃப்... அதாவது,

பிரீமெச்சூர் ஓவேரியன் ஃபெயிலியர் என்பார்கள் இதை. சமீபகாலமாக இந்தப் பிரச்னை இளம் பெண்கள் மத்தியில் அதிகரித்திருப்பதை நானே உணர்ந்திருக்கிறேன். 

எங்கள் மருத்துவமனைக்கு வருபவர்களிலே கூட 5.5 சதவீதத்தினர் இந்தப் பிரச்னையோடு வருகிறார்கள்.

இது அதிகம் தான்’’ என்று கவலையோடு ஆரம்பித்தார் அவர். ‘‘ஒரு பெண்ணின் கருப்பையில் மாதாமாதம் கருமுட்டை வளர்ந்து, முதிர்ந்து, கரு உருவாவதற்காகக் காத்திருக்கிறது.

பிறகு இது செயலிழப்பதைத்தான் மாதவிடாய் சுழற்சி என்கிறோம். இந்த சுழற்சி சராசரியாக 12-14 வயதில் தொடங்கும். ஆனால், இதன் முடிவு என்பது வயது சம்பந்தப்பட்டதல்ல... எண்ணிக்கை சம்பந்தப்பட்டது. 

ஒரு பெண்ணின் சினைப்பைகள் கருமுட்டையை வெளிவிடும் வரை இந்த சுழற்சி நடக்கும். ‘இதெல்லாம் ஏற்கனவே எழுதப்பட்ட தீர்ப்பு’ என்பார்களே...

அப்படி ஒவ்வொரு பெண்ணுக்கும் இத்தனை கருமுட்டைகள்தான் உருவாகும் என்பதை பிறக்கும்போதே இயற்கை முடிவு செய்து விடுகிறது.

சொல்லப் போனால் தாயின் கருவுக்குள் ஒரு பெண் குழந்தை இருக்கும் போதே, தன் கருவில் அது லட்சக்கணக்கில் கரு முட்டைகளைச் சுமக்கிறது.

பிறந்தது முதல் குழந்தை வளர வளர, இந்தக் கரு முட்டைகளின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வரும்.

பூப்பெய்தும்போது சுமார் இரண்டு லட்சமாக இருக்கும். மாதம் ஒரு கருமுட்டை முழு வளர்ச்சி அடைந்து மாதவிடாய் சுழற்சியை ஏற்படுத்தினாலும், இன்னொரு பக்கம் மிச்சமுள்ள கருமுட்டைகள் அழிந்து கொண்டே தான் இருக்கும்.

இது இயற்கையானது. இரண்டு பக்கமும் எரியும் மெழுகுவர்த்தி ஒரு கட்டத்தில் கரைந்து காலியாகும் அல்லவா?

அப்படி பெண்ணின் சினைப்பை ஒரு கட்டத்தில் காலியாகி, இனி கருமுட்டை ஸ்டாக் இல்லை என்று கையை விரித்து விடுவதையே நாம் மெனோபாஸ் நிலை என்கிறோம். 

இப்படி இயற்கையாக ஒரு பெண் வளரும்போது நிகழும் கருமுட்டை அழிவு, இன்று கொஞ்சம் நார்மலைத் தாண்டி விபரீதமான அளவுக்கு அதிகம் நிகழ்ந்து விடுகிறது என்பதையே இப்படிப்பட்ட அறிகுறிகள் காட்டுகின்றன. கரு முட்டைகளின் அழிவுக்கு பல காரணங்கள் இருக்கலாம்.

தீவிரமான நோய்த் தாக்குதல், அதற்காக உட்கொள்ளப்படும் வீரியமிக்க மருந்துகள் போன்றவற்றால் கூட கருமுட்டை அதிக அளவில் அழிந்து போகலாம்’’ என்கிற கமலா செல்வராஜ்,

குழந்தையின்மைக்காக எடுத்துக் கொள்ளப்படும் சிகிச்சைகளில் ஒன்று கூட இந்தப் பிரச்னைக்கு முக்கியக் காரணமாக அமைவதை சுட்டிக் காட்டினார். 

‘ஓவேரியன் டிரில்லிங்’ என்பார்கள் அதை. அதாவது, கருப்பையில் தங்கிவிடும் தேவையில்லாத விஷயங்களை லேப்ராஸ்கோப் மூலமாக உறிஞ்சி எடுப்பது.

பொதுவாக, பாலிசிஸ்டிக் ஓவரி போன்ற கருப்பை பிரச்னை இருக்கும் பெண்களுக்கே இந்த சிகிச்சை செய்ய வேண்டும்.

ஆனால் இப்போதெல்லாம், குழந்தை இல்லை என்றாலே பெண்ணுக்குத்தான் பிரச்னை இருக்கும் என சில டாக்டர்கள் முன்முடிவு செய்துவிடுகிறார்கள்.

உடனடியாக பெண்ணுக்கு இந்த சிகிச்சையை செய்து பார்த்து விடுவது வழக்கமாகி விட்டது. மாதவிடாய் சுழற்சி சரியாக இருக்கும் ஆரோக்கியமான பெண்களுக்கே இந்த சிகிச்சையை செய்து, சினைப்பையில் இருக்கும் பல்லாயிரம் கருமுட்டைகளை அழித்துவிடுகிறார்கள். 

இந்த ஆபத்தான பழக்கத்தைக் கைவிட வேண்டும்’’ என்கிறார் அவர். அறியாமையை விட மோசமானது முழுமை பெறாத விழிப்புணர்வு. அதைத்தான் நாம் அனுபவித்துக் கொண்டிருக்கிறோமோ!
Tags:
Privacy and cookie settings