திருச்சி மாவட்டம் பொன்மலைப்பட்டி அருகே கிழக்குறிச்சி கிராம ஊராட்சியில் உள்ளது பேன்சி நகர்.
இப்பகுதியில் வாகனத் திருட்டு, செயின் பறிப்பு உள்ளிட்ட குற்ற நிகழ்வுகள் அடிக்கடி நடைபெறுவதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.
இதைத் தடுக்கும் வகையில் காவல் துறையினரின் ஆலோசனைப்படி, அப்பகுதியில் சிசிடிவி கேமராக்களை அமைக்க கிராம ஊராட்சித் தலைவர் ஜோஸ்பின், துணைத் தலைவர் சுதாப்பிரியா, 11வது வார்டு உறுப்பினர் டி.எம்.குமார் ஆகியோர் முடிவு செய்தனர்.
இதன்படி, முக்கிய சந்திப்புகளைக் கொண்ட 3 இடங்களில் மொத்தம் 12 சிசிடி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இவற்றின் பதிவுகள் அருகில் உள்ள வீடுகளில் சேமிக்கப் படுகின்றன.
சிசிடிவி கேமரா மற்றும் பொருத்தும் பணி உள்ளிட்ட வற்றுக்கான செலவு சுமார் 40,000 ரூபாயை உள்ளாட்சிப் பிரதிநிதிகள், அப்பகுதி நன்கொடையாளர்கள் பங்களிப்புடன் திரட்டி யுள்ளனர்.
தற்போது இந்த சிசிடிவி கேமராக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளன. இதை யடுத்து இந்தப் பகுதி முழுவதும் 24 மணி நேர கண்காணிப்பில் வந்துள்ளன.
இதனால் திருட்டு, வழிப்பறி போன்ற அசம்பாவித அச்சமின்றி செல்லவும், ஒரு பாதுகாப்பாகவும் உணர்வதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
கொரோனா பொது முடக்க நிதி நெருக்கடி காலத்திலும் தங்கள் பங்களிப்போடு பாதுகாப்பைக் கருதி சிசிடிவி கேமராக்களை அமைத்த பேன்சி நகர் மக்களை பலரும் பாராட்டி வருகின்றனர்.