2020 ஆம் ஆண்டு மோசமான வருடம் என்றே கூற வேண்டும். இந்த ஆண்டு ஆரம்பமானதே பெருந்தொற்றுடன் தான். சீனாவின் வுஹான் மாகாணத்தில் உள்ள சந்தையில் இருந்து கொரோனா என்னும் வைரஸ் பரவ ஆரம்பித்து,
தற்போது உலகின் சிறிய நாடுகள் முதல் பெரிய நாடுகள் வரை மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டு வருகிறது.
கொரோனா நோய்த்தொற்றினால் பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் மிக மோசமாக அதிகரித்து வருகிறதே தவிர குறைந்த பாடில்லை.
இந்நிலையில் சீன மருத்துவமனை ஒன்றில் புபோனிக் பிளேக் பரவல் குறித்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சீனாவில் உள்ள பயனூர், மங்கோலியா உட்பகுதி போன்ற பகுதிகளில் இந்த ப்ளேப் பரவ வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதனால் இந்த பகுதிகளில் மூன்றாம் கட்ட புபோனிக் பிளேக் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதனால் மக்கள் மிகவும் கவனமாக தங்களை தாங்களே தனிமைப்படுத்தி, சுகாதாரத்தைப் பின்பற்றி பாதுகாப்புடன் இருக்குமாறு அந்நாட்டு அரசு கூறியுள்ளது.
புபோனிக் எச்சரிக்கை
கடந்த சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் சீனாவின் பயனூர் பகுதியில் உள்ள சிலர் புபோனிக் அறிகுறிகளுடன் மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர்.
எனவே கொரோனாவிற்கு அடுத்ததாக புபோனிக் பிளேக் பரவல் ஏற்பட வாய்ப்புள்ளதால், அப்பகுதியில் வாழும் மக்களை கவனமாக இருக்க அந்நாட்டு அரசு கூறியுள்ளது.
யாருக்கேனும் காய்ச்சல் இருந்தால், உடனே மருத்துவமனை அணுக வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.
குறிப்பாக ஜூலை மாதம் ஆரம்பித்தது முதலாக பலர் புபோனிக் பிளேக் அறிகுறியால் அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள்.
காரணம்
புபோனிக் அறிகுறியுடன் அனுமதிக்கப்பட்ட பலரும் மர்மோட் இறைச்சியை உட்கொண்டுள்ளனர். மர்மோட் என்பது சீனாவில் காணப்படும் ஒரு வகையான அணில்.
ஒருவேளை இந்த அணில் கறியை உட்கொண்டதால் புபோனிக் பிளேக் நோய் ஏற்பட்டிருக்கலாம் என்று கூறுகிறார்கள்.
மேலும் இந்த இறைச்சியை யாரெல்லாம் சாப்பிட்டார்களோ அல்லது இறைச்சி சாப்பிட்டவர்களுடன் யாரெல்லாம் தொடர்பு கொண்டிருந்தார்களோ, அவர்களை தனிமைப்படுத்தி கவனித்தும் வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இப்போது புபோனிக் பிளேக் என்றால் என்ன, அது எவ்வாறு பரவுகிறது, அதன் அறிகுறிகள் என்னென்ன போன்றவற்றைக் காண்போம்.
புபோனிக் பிளேக்
புபோனிக் பிளேக் என்பது ஒரு வகை பாக்டீரியாவால் ஏற்படும் பிளேக்கின் மிகவும் பொதுவான வடிவமாகும். பிளேக்கில் மூன்று வகைகள் உள்ளன.
அவை புபோனிக், செப்டிசெமிக் மற்றும் நிமோனிக் - உடலின் எந்த பகுதி பாதிக்கப்படுகிறதோ, அதைப் பொறுத்தது. புபோனிக் பிளேக் நிணநீர் மண்டலத்தை பாதிக்கிறது.
இது நோயெதிர்ப்பு மண்டலத்தின் ஒரு பகுதி. நிணநீர் மண்டலத்தை பாதிக்கும் பிளேக் பாக்டீரியா வீக்கத்தை ஏற்படுத்துகிறது.
இந்த நோய்த்தொற்று மிகவும் ஆபத்தானது மற்றும் சரியான சிகிச்சையுடன் ஆன்டிபயாடிக் கொடுக்கப்படா விட்டால், அது உடலின் மற்ற பகுதிகளுக்கும் பரவி, உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்திவிடும்.
14 ஆம் நூற்றாண்டில் புபோனிக் பிளேக்கால் சுமார் 50 மில்லியன் மக்கள் இறந்தனர். புபோனிக் பிளேக்கை ப்ளாக் டெத் என்றும் அழைப்பர்.
புபோனிக் பிளேக்கின் அறிகுறிகள் என்ன?
வழக்கமாக, பிளேக் நோயால் பாதிக்கப் பட்டவர்களுக்கு தொற்று ஏற்பட்ட இரண்டு முதல் மூன்று நாட்களுக்குப் பிறகு தான் அறிகுறிகள் தெரியும்.
அந்த அறிகுறிகளாவன:
* காய்ச்சல் மற்றும் குளிர்
* தலைவலி
* தசை வலி
* களைப்பு
* வலிப்புத்தாக்கம்
* சிலருக்கு வலிமிக்க வீங்கிய நிணநீர் சுரப்பிகளையும் உண்டாக்கலாம். அவை குமிழிகள் என்று அழைக்கப்படுகின்றன. இந்த வீக்கம் கோழி முட்டையின் அளவில், அக்குள், இடுப்பு அல்லது கழுத்துப் பகுதியில் கூட ஏற்படலாம்.
புபோனிக் பிளேக் எதனால் ஏற்படுகிறது மற்றும் எவ்வாறு பரவுகிறது?
புபோனிக் பிளேக் ஒரு பாக்டீரியா தொற்று. இது யெர்சினியா பெஸ்டிஸ் என்னும் பாக்டீரியாவால் ஏற்படுகிறது. இது பாதிக்கப்பட்ட ஈக்களை தொடர்பு கொள்வதன் மூலம் பரவுகிறது.
மேலும் பாதிக்கப்பட்ட கொறித்துண்ணிகளான எலி, அணில் அல்லது சில வகை உண்ணிகளுடன் தொடர்பு கொள்ளும் போது பரவுகிறது.
சில சமயங்களில் பாதிக்கப்பட்ட விலங்குகள் அல்லது நபருடன் நேரடி தொடர்பு கொள்வதன் மூலம் புபோனிக் பிளேக்கைப் பெறலாம்.
எவ்வாறு சிகிச்சை அளிக்கப்படுகிறது?
புபோனிக் பிளேக் வலுவான மற்றும் பயனுள்ள ஆன்டி-பயாடிக் பயன்படுத்தி சிகிச்சை அளிக்கப்படுகிறது.
ஒருவர் பிளேக் நோயால் பாதிக்கப் பட்டிருப்பதை சந்தேகப்பட்டால், சற்றும் தாமதிக்காமல் உடனே மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட வேண்டும்.
புபோனிக் பிளேக்கை ஆரம்பத்திலேயே கண்டறிந்த சிகிச்சை மேற்கொண்டால், சரிசெய்துவிடலாம். இருப்பினும், எந்த சிகிச்சையும் மேற்கொள்ளாமல் இருந்தால்,
அந்த நோய்த்தொற்று இரத்த ஓட்டத்தில் அல்லது நுரையீரலில் கலந்து பெருக்கமடைந்து, 24 மணி நேரத்திலேயே ஒருவருக்கு இறப்பை உண்டாக்கலாம்.
புபோனிக் பிளேக்கிற்கான தடுப்பு நடவடிக்கைகள் என்ன?
பிளேக் நோய்க்கு பயனுள்ள தடுப்பூசி எதுவும் கிடைக்கவில்லை என்றாலும், அதைத் தடுக்க அல்லது குறைக்க சில வழிகள் உள்ளன.
நீங்கள் பிளேக் ஏற்படும் பகுதியைச் சுற்றி இருந்தால், பின்வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
* வீடு, அலுவலகம் போன்ற பகுதிகளைச் சுற்றி கொறிக்கும் உயிரிகளான எலி, அணில் போன்றவை இல்லாதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
* உங்கள் செல்லப்பிராணிகளை ஈக்கள் மொய்க்காமல் அல்லது உண்ணிகள் அண்டாமல் வைத்திருங்கள்.
* பாதிக்கப்பட்ட விலங்குகளை கையாளும் போது, கைகளுக்கு கையுறைகளை அணிந்து உங்களுக்கும், பாக்டீரியாவிற்கும் இடையிலான தொடர்பை தடுத்திடுங்கள்.