பிலிப்பைன்ஸ் நாட்டின் அரசர் மலக்கஸ். அரசியின் பெயர் சாலா. அரசருக்கும் அரசிக்கும் தங்களது ஒரே மகள் இளவரசி மயூமி மீது அளவற்ற அன்பும் பாசமும் இருந்தது.
அரசர் தன் அமைச்சரிடம் இளவரசிக்குப் பொருத்தமான கணவனைத் தேர்ந்தெடுக்க யோசனை கேட்க, அமைச்சரும் இளவரசிக்கு சுயம்வரம் நடத்தலாம் என்றும்,
அதற்கான அறிவிப்பை நாடு முழுவதும் அறிவிக்கலாம் என்று யோசனை கூறினார். அரசரும் அவ்வாறே செய்யுமாறு பணிக்க, அறிவிப்பும் வெளியிடப்பட்டது.
சில நாட்களில் அழகும் வீரமும் கொண்ட மூன்று இளவரசர்கள் அரசர் மலக்கஸின் அரண்மனைக்கு வந்து சேர்ந்தனர்.
அவர்களுள் ஒருவனின் பெயர் மஜிட்டங். மற்றொருவனின் பெயர் டகிலா. மூன்றாவது இளவரசனின் பெயர் மராங்கல். அரசரும் அம்மூன்று இளவரசர்களையும் மிகுந்த மரியாதையுடன் வரவேற்றான்.
மூன்று இளைஞர்களையும் கண்ட அரசருக்கு குழப்பம் ஏற்பட்டது. ஏனென்றால், இளைஞர்கள் மூவருமே அழகும் வீரமும் தீரமும் கொண்டிருந்தனர்.
அவர்களில் இளவரசிக்குப் பொருத்தமான கணவனைத் தேர்ந்தெடுப்பது எப்படி என்று அரசன் யோசித்தான். பிறகு அரசர் மலக்கஸ் மூன்று இளைஞர்களையும் நோக்கி, இளைஞர்களே!
உங்கள் மூவருக்கும் ஒரு போட்டி வைக்கப் போகிறேன். அதாவது, உங்கள் மூவரில் யார் எனது மகள் மயூமிக்கு மிகச் சிறந்த பரிசுப் பொருளைக் கொண்டு வந்து தருகிறீர்களோ, அவருக்கே என் மகளைத் திருமணம் செய்து தருவேன்!
இன்னும் ஒரு மாதத்தில் நீங்கள் பரிசுப் பொருளைக் கொண்டு வந்து தர வேண்டும்!'' என்று உத்தர விட்டார்.
இளைஞர்கள் மூவரும் அரசரின் உத்தரவை ஏற்றுக் கொண்டு, தனித்தனியே புறப்பட்டுச் சென்றனர். ஒரு மாதம் கழிந்தது. மூன்று இளைஞர்களும் மலக்கஸின் அரண்மனைக்கு வந்து சேர்ந்தனர்.
அரசர் மலக்கஸ் மூவரையும் நோக்கி, என்ன இளைஞர்களே! என் மகளுக்கான மிகச் சிறந்த பரிசுப் பொருளைக் கொண்டு வந்திருக்கிறீர்களா?'' என்று கேட்டார்.
பிறகு இளவரசன் மஜிட்டங்கை நோக்கி, இளவரசன் மஜிட்டங்! நீ என்ன பரிசுப்பொருள் கொண்டு வந்திருக்கிறாய்? என்று கேட்டார்.
மஜிட்டங்கும் தன் பையிலிருந்து அழகான நீல வைரம் ஒன்றை வெளியில் எடுத்தான். அதை மன்னரின் கையில் கொடுத்து விட்டு, மன்னா!
நான் நாடு முழுவதும் தேடி இந்த விலை மதிப்பற்ற வைரத்தை தங்கள் மகளுக்காகக் கொண்டு வந்துள்ளேன்! என்று சொன்னான்.
பிறகு டகிலாவை அழைத்தார் அரசர் மலிக்கஸ், டகிலா தன் பையிலிருந்து அழகான வாள் ஒன்றை வெளியில் எடுத்து, அரசரின் கையில் கொடுத்தான்.
மன்னா! நான் நாடு முழுவதும் அலைந்து திரிந்து, சிறந்த போர்ப் பயிற்சியாளரிடம் பெற்று வந்த வாள் இது.
இந்த வாளால் தாங்கள் தங்கள் பகை நாட்டு மன்னர்களை எளிதில் வெல்லலாம். உங்கள் நாட்டை விரிவுப்படுத்திக் கொள்ளலாம்! என்றான். இறுதியாக அரசரின் பார்வை இளவரசன் மராங்கல்லின் மீது விழுந்தது.
மராங்கல் கையில் பரிசுப் பொருள் எதுவும் இல்லை. அரசர் மராங்கல்லிடம், இளவரசன் மராங்கல்லே! நீ என்ன பரிசுப் பொருள் கொண்டு வந்திருக்கிறாய்? என்று கேட்டார்.
மன்னா! நான் பரிசுப் பொருளைத் தேடி என் பயணத்தைத் தொடங்கினேன். அப்போது வழியில் முன்பின் அறிந்திடாத முதியவர் ஒருவர் காயமுற்றுக் கிடந்தார்.
அதற்குப் பிறகு நான் பரிசுப் பொருளைத் தேடி என் பயணத்தைத் தொடர்ந்தேன். அப்போது ஓரிடத்தில் அப்பாவி மக்கள் பெருங்கூட்டமாக என் எதிரே ஓடி வந்தனர்.
அவர்களுடைய கிராமத்தைக் கொள்ளைக்காரர்கள் சூழ்ந்து கொண்டதாக என்னிடம் கூறினர்.
சரி... அதனைக் கேட்டு நீ என்ன செய்தாய்? - அரசர் மலிக்கஸ் வியப்போடு கேட்டார். மன்னா! நான் அந்தக் கிராம மக்களிடம் பேசினேன்.
சிறு கொள்ளைக் கூட்டத்திற்குப் பயந்து இவ்வாறு ஓடி ஒளிவது சரியல்ல என்று கூறிய நான், அந்தக் கிராம மக்களை மீண்டும் அவர்களுடைய கிராமத்திற்கே வழி நடத்திச் சென்றேன்.
கிராம மக்களை ஒன்றிணைத்து, கொள்ளையர்களுடன் போராடினேன். கொள்ளையரை அங்கிருந்து விரட்டி அடித்தேன்.
காயமுற்றவர்களுக்கு மருந்திட்டு அவர்களைக் குணப்படுத்தினேன். கிராம மக்கள் அனைவரும் பழைய நிலைக்குத் திரும்பி வரும் வரை அவர்களுக்கு உதவி செய்தேன்.
இதற்குள் தாங்கள் எனக்கு அளித்திருந்த ஒரு மாத கால அவகாசம் முடிந்து விட்டது. அதனால் தான் என்னால் பரிசுப்பொருள் எதையும் கொண்டு வர இயலவில்லை!' என்று கூறி முடித்தான் இளவரசன் மராங்கல்.
இளவரசன் சொன்னதைக் கேட்ட அரசர் மலிக்கஸ் வியப்பில் ஆழ்ந்து போயிருந்தார்.
அரசர் மலிக்கஸ் மட்டுமின்றி அரசவையில் இருந்த அனைவருமே இளவரசன் மராங்கல்லை நோக்கி மகிழ்ச்சி கோஷம் எழுப்பினர். அரசர் மராங்கல்லிடம், அருமை! அருமை! இளவரசன் மராங்கல்லே!
நீ பரிசுப் பொருள் எதுவும் கொண்டு வரவில்லை என்று ஏன் நினைக்கிறாய்? எனக்குப் பிறகு இந்நாட்டை ஆட்சி செய்யும் முழு தகுதியும் உனக்கு இருக்கிறது.
நீ என் மகள் மயூமிக்காக அன்பு என்ற விலைமதிப்பற்ற பரிசைக் கொண்டு வந்திருக்கிறாய்! எனவே என் மகள் மயூமியை உனக்குத் திருமணம் செய்துவைக்க எனக்கு முழுமையான சம்மதம் தான்.
என் மகளின் சம்மதத்தை மட்டுமே கேட்க வேண்டும்!'' என்று மகிழ்ச்சியோடு கூறியபடி தன் மகள் மயூமியை நோக்கித் திரும்பினார்.
இளவரசி மயூமியும் இளவரசன் மராங்கல்லைத் திருமணம் செய்து கொள்ள முழு சம்மதம் தெரிவித்தாள்.
மறுநாளே, இளவரசி மயூமிக்கும் இளவரசன் மராங்கல்லுக்கும் வெகு கோலாகலமாகத் திருமணம் நடைபெற்றது. மயூமியும், மராங்கல்லும் மகிழ்ச்சியாக பல காலம் வாழ்ந்தனர்.
Thanks for Your Comments