தேள் (Scorpion) கணுக்காலிகள் பிரிவைச் சேர்ந்த உயிரினமாகும். தேள்களில் கருந்தேள் உள்ளிட்ட பல வகைகள் உள்ளன.
இதன் வால் கணுக்களாகவும் நுனியில் ஒரு நச்சுத் தன்மையுள்ள கூர்மையான கொடுக்கும் கொண்டிருக்கும். முன்பக்கக் கொடுக்குகள் இரையைக் கவ்விப் பிடிப்பதற்கும்,
பின்பக்கக் கொடுக்கு இரை அல்லது எதிரிகள் மீது நஞ்சைப் பாய்ச்சிக் கொல்வதற்கும் உதவுகின்றன.
இயற்கை ஒரு விசித்திரமான விஞ்ஞானி. ஓர் உயிரினத்துக்கு எவ்வளவு பலத்தைக் கொடுக்கிறதோ, அதே அளவுக்குப் பலவீனத்தையும் கொடுத்து விடுகிறது.
அவற்றை முறையாகப் பயன்படுத்தி வாழ்வதும் வீழ்வதும் அதனதன் செயல்பாடுகளைப் பொறுத்தது. உயிரினங்களின் சர்வைவல் கதைகள் பல சுவாரஸ்யங்களைக் கொண்டது. அதில் தேள் வேற லெவல்.
இனப்பெருக்கம்
மொத்தக் குட்டிகளும் தாயின் முதுகில் சர்வைவ் செய்தாக வேண்டும். பயணிக்கிற வழியில் எங்கேனும் விழ நேர்ந்தால் விழுந்த நாள் தான் அதற்கு நினைவு நாள். இந்தப் பகுதியை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
குட்டிகள் தாயின் முதுகில் பயணிக்க சுவாரஸ்யமான ஒரு விஷயம் இருக்கிறது, அதைப் பிறகு பார்க்கலாம்.
உலகில் மொத்தம் 2000 வகையான தேள்கள் உள்ளன. அவற்றில் 25 வகையான தேள்கள் வீரிய விஷத் தன்மை கொண்டவை. வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம் என்பார்கள்.
வில்லாதி வில்லன் தேளுக்கு உடல் தான் ஆயுதம். தேள் ஒரு வருடம் முழுவதும் உணவு இல்லாமல் வாழ முடியும். அதன் படைப்பு அப்படி.
தேள் வளர்சிதை மாற்றம்
அவை 48 மணி நேரம் நீருக்கு அடியில் மூழ்கி உயிர்வாழ முடியும். தேள் கடுமையான, வறண்ட சூழலிலும் உயிர் வாழ்கிறது,
தேள் உணவிலிருந்து பெறும் ஈரப்பதத்தில் மட்டும் தான் உயிர் வாழ்கிறது. ஆக்சிஜனில் பத்தில் ஒரு பங்கு மட்டுமே அவை உயிர் வாழத் தேவைப்படுகின்றன.
முன்பே சொன்னது போல இயற்கை ஒரு விசித்திரமான விஞ்ஞானி. தேளுக்குப் பன்னிரண்டு கண்களைக் கொடுத்த இயற்கை, அவற்றுக்குச் சரியான பார்வைத் திறனைக் கொடுக்காமல் விட்டு விட்டது.
உடலுக்குள் குட்டிகளை உருவாக்குகிறது
தலைப் பகுதியில் 2 கண்களும், நெஞ்சுப் பகுதியில் ஐந்து ஜோடி கண்களும் இருக்கின்றன. விளைவு, இரையை அவை அதிர்வு மற்றும் வாசனையை வைத்து தான் கண்டுபிடித்தாக வேண்டும்.
`லட்டுல வச்சேன்னு பார்த்தியா? நட்டுல வச்சேன்’ கதை தான். தேள்கள் எந்த உயிரினத்தை இரையாகப் பிடித்தாலும், அவற்றைத் திரவ வடிவத்தில் மட்டுமே உட்கொள்ள முடியும்.
தேள் இரையை உண்ணும் போது அதன் முகப் பகுதியை நன்கு கவனித்துப் பார்த்தால் கொடூரமான ஒரு விலங்கைப் போல காணப்படும்.
செரிமான திரவங்கள் அவற்றின் உணவில் ஊடுருவி பின்னர் திரவ வடிவில் சத்துக்களாக உறிஞ்சப்படுகின்றன.
இனப்பெருக்க நேரத்தில் ஆணுடன் பெண் இணை சேர்ந்து விடுகிறது. ஒருவித நடனம் மூலம் இனப்பெருக்க செயல் நடைபெறுகிறது.
ஆணுடன் இருப்பதை விரும்புவதில்லை
பொதுவாக உடலுக்கு வெளியே முட்டைகளை அடைகாக்கும் பூச்சிகளைப் போல் இல்லாமல், தேள் நேரடியாகவே உடலுக்குள் குட்டிகளை உருவாக்குகிறது, இது விவிபரிட்டி (viviparity) என அழைக்கப்படுகிறது.
முட்டையிட்டு பிறகு அவை இயற்கையான முறையில் முட்டையிலிருந்து வெளியே வருகிற முறை ஓவிபரிட்டி (Oviparity) என்று அழைக்கப்படுகிறது. எடுத்துக்காட்டு ஆமை.
தேள்கள் தன்னுடைய முட்டைகளை அதன் உடலுக்குள்ளாகவே வைத்து அடை காக்கின்றன. குட்டிகள் கருவில் உருவாகி, பிறகு புழுக்களாக உருமாறும் வரை அதன் உடலிலேயே இருக்கின்றன.
குட்டிகள் தாயின் முதுகில் பயணிக்கின்றன
குறிப்பிட்ட காலம் வரை குட்டிகள் தாயோடு இருக்கின்றன. பிறகு தாயிடமிருந்து பிரிந்து சென்று விடுகின்றன.
சர்வைவல் குறித்த எந்த முன்னெச்சரிக்கையும் இல்லாத பல குட்டிகள் மற்ற விஷப் பூச்சிகளுக்கு இரையாகி விடுகின்றன. Assassin bug என்றொரு பூச்சி வகை உள்ளது.
அதற்குத் தமிழில் கொலையாளிப் பூச்சி என்று பெயர். இவை தனியாகப் பிரிந்து வருகிற தேள் குட்டிகளை சமயம் பார்த்துக் கொன்று, தின்று விடுகின்றன.
குடும்பத்திலிருந்து பிரிந்து போகிற எந்த உயிரினமும் தனித்துப் பிழைப்பதெல்லாம் அதனதன் பாடு.
விஷம் உருவாக ஒரு வாரக் காலம்
டெல்சன் என்பது விஷம் உற்பத்தி செய்யப்படும் இடமாகும். டெல்சனின் நுனியில் அக்குலியஸ் (aculeus) எனப்படும் கூர்மையான ஊசி போன்ற அமைப்பு உள்ளது. சுருங்கச் சொன்னால் இதுவே தேளின் ஆயுதக் கிடங்கு.
இரையைப் பிடிக்க விஷமுள்ள கொடுக்கை ஒரு முறைப் பயன்படுத்தினால் விஷம் உருவாக ஒரு வாரக் காலம் ஆகும் என்பதால், இரையைப் பிடிப்பதற்கு அதன் முன் கொடுக்குகளைப் பயன்படுத்தவே அவை விரும்புகின்றன.
முடியாத பட்சத்தில் தான் விஷக் கொடுக்கை பயன்படுத்துகின்றன. மனிதர்களைப் பயத்தின் காரணமாகவே தேள்கள் கொட்டுகின்றன.
அரிசோனா பார்க்
எல்லா தேள்களும் விஷம் கொண்டவை தான், ஆனால், சில தேள்கள் மட்டுமே உயிரிழப்புகளுக்குக் காரணமாகின்றன.
இதன் விஷம் நரம்பு மண்டலத்தைத் தாக்குவதால் மட்டுமே உயிரிழப்பு ஏற்படுகிறது. கருந்தேள் இந்த வகையைச் சார்ந்தது தான்.
உலகத்தில் இருக்கிற தேள் வகைகளில் Arizona bark என்கிற தேள் அதிக விஷம் கொண்டது. தேள் கொட்டி இறந்து போகிற 75 சதவிகித இறப்புகளுக்கு இந்தத் தேள்கள் தான் பொறுப்பு.
தேள்களின் விஷம் சைனைட் விஷத்தை விடப் பல மடங்கு அதிகம் விஷம் கொண்டவையாகக் கணக்கிடப் பட்டிருக்கிறது.
இரையைப் பிடிப்பதற்கு மட்டுமே தேள் தன்னுடைய விஷத்தைப் பயன்படுத்துகிறது. விஷம் கொண்ட சிலந்திகள், தவளை, பல்லிகள், பூச்சிகள் தான் தேளின் முக்கிய உணவு.
இரவில் இரை தேடும் உயிரினம்
தேள் புற ஊதா ஒளியின் கீழ் ஒளிரும் தன்மை கொண்டது. இந்த ஒளிரும் தன்மை தேள் ஆராய்ச்சியாளர்களின் பணியைக் கணிசமாகக் குறைக்கிறது.
100 வருடங்களுக்கு முன்னாள் சுமார் 600 தேள் இனங்கள் மட்டுமே கண்டறியப் பட்டிருந்தன.
இரவில் ஒளிரும் தன்மை கொண்டதால் விஞ்ஞானிகள் இப்போது யு.வி. (Ultraviolet) விளக்குகளைப் பயன்படுத்தி 2,000 வகையான தேள்களைக் கண்டறிந்துள்ளனர்.
தேள் தீயில் சிக்கி இறந்து போயிருந்தால் அதனுடைய தோல் இருளில் ஒளிராது, மாறாக இயற்கையாக இறந்திருந்தால் பல ஆண்டுகள் ஆனாலும் ஒளிரும்.
கரப்பான் பூச்சியைப் போல
மற்ற விலங்குகளுடன் ஒப்பிடும் போது அணுசக்தித் தாக்குதலிலிருந்து தப்பிப்பதற்கான வாய்ப்பு இவற்றுக்கு மிக அதிகம். தேள் எந்தச் சூழ்நிலையிலும் உயிர் வாழக் கூடியவை.
அதிக பட்சமாக 2 வருடங்களிலிருந்து எட்டு வருடங்கள் வரை உயிர் வாழக் கூடியவை. அதிக பட்சமாக 9 அங்குலம் வரை வளரக் கூடியவை.
இவை இந்தியாவிலும், இலங்கையிலும் மட்டுமே காணப்படுகின்றன. தேள் நெருப்பால் சூழப்பட்ட போது விஷக் கொடுக்கால் தன்னைத் தானே குத்திக் கொண்டு தற்கொலை செய்து கொள்கிறது என்று ஒரு கட்டுக்கதை இருக்கிறது.
சிறந்த வலி நிவாரணி
தேளின் விஷம் மிகக் கொடியதாக இருக்கலாம். ஆனால் அதை சிறந்த வலி நிவாரணியாக பயன்படுத்தலாம் என கூறுகிறார் இஸ்ரேல் ஆய்வாளர் மைக்கேல் குர்விட்ஸ்.
இஸ்ரேலின் டெல் அவிவ் பல்கலைக்கழக தாவர அறிவியல் துறை பேராசிரியர் மைக்கேல் குர்விட்ஸ் கூறுகையில், தேளின் விஷத்திலிருந்து சிறந்த வலி நிவாரணியை உருவாக்கக் கூடிய
சாத்தியங்கள் உள்ளன. இது குறித்து விரிவாக ஆய்வு செய்து வருகிறோம். எந்தவித பக்க விளைவையும் தேளின் விஷத்திலிருந்து உருவாக்கப்படும் வலி நிவாரணி ஏற்படுத்தாது.
தேளின் விஷத்தில் உள்ள பெப்டைட் டாக்சின்கள், நமது நரம்பு மண்டலம் மற்றும் சதைப் பகுதிகளில் ஊடுறுவி வலியை முற்றிலுமாக அகற்ற உதவும்.
பாலூட்டிகளின் உடல்களில் ஒன்பது வகையான சோடியம் வழிகள் (sodium channels) காணப்படுகிறது. இவற்றில் சில தான், வலியை உருவாக்கி அதை மூளைக்கு தெரிவிக்கிறது.
இதை சரி செய்து விட்டால் நிச்சயம் இந்த வலி நிவாரணியை வெற்றிகரமாக உருவாக்க முடியும்.
மேலும் வலி உருவாகும் இடத்தையும் துல்லியமாக கண்டறிந்து அந்த இடத்தில் மட்டும் மருந்து வேலை பார்க்கும் வகையில் செய்ய முடியும்.
இதன் மூலம் பல்வேறு பக்க விளைவுகளை நாம் தவிர்க்க முடியும் என்றார் குர்விட்ஸ். இஸ்ரேலில் உள்ள மஞ்சள் நிற தேளில்தான் தற்போது குர்விட்ஸ் தலைமையிலான குழு ஆய்வு செய்து வருகிறது.
உலகிலேயே மிகவும் அபாயகரமான நச்சைக் கொண்டது இந்த தேள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தேளின் விஷத்தில் 300க்கும் மேற்பட்ட பெப்டைடுகள் உள்ளனவா
தேள் கடிக்கு முதலுதவி
தேள் கடித்தவுடன் அதன் கடிவாய்க்கு சுமார் 15 செ.மீ. மேல் பகுதியில் கயிறு அல்லது துணியால் இறுக்கி கட்ட வேண்டும். இதன் மூலம் தேளின் விஷம் உடலில் பரவுவதை தடுக்க முடியும்.
இதன் பின்னர் தேள் கடித்த இடத்தில் சுமார் அரை மணி நேரம் ஐஸ்கட்டி அல்லது குளிர்ந்த நீரில் நனைத்த துணியால் ஒத்தடம் கொடுக்க வேண்டும்.
அந்த துணியால் கடிவாய் பகுதியில் கட்டும் போடலாம். இதன் மூலம் தேள் கடித்த வலி ஓரளவு குறையும். கடித்த இடத்தில் தேளின் கொடுக்கு பதிந்திருந்தால் அதை உடனடியாக அகற்ற வேண்டும்.
தேள் கடித்த பகுதியை உதறவோ, மேல் நோக்கி தூக்கவோ கூடாது. கீழ்நோக்கி தொங்க போடலாம்.
முதலுதவி செய்ததும் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்று முறையான மருத்துவச் சிகிச்சை பெறுவது அவசியம்.
Thanks for Your Comments