கொரோனா வந்தால் என்னவெல்லாம் பாதிப்புகள் வரும் என்பதை என் சொந்த அனுபவத்தின் வாயிலாக பகிர்கிறேன். இவை அனைத்தும் என் சொந்த அனுபவத்தின் அடிப்படையில் எழுதியிருக்கிறேன்.
ஏப்ரல் 14ம் தேதி சித்திரை திருநாள் நாங்கள் குடும்பத்துடன் தேனி மாவட்டம் மேகமலைக்கு சென்று ரசித்தோம். எல்லோரும் மாஸ்க் அணிந்தே மலைகளில் இருந்து ரசித்தோம்.
மறுநாள் காலை அலுவலக பணியை வீட்டில் இருந்தபடி செய்து கொண்டிருந்தேன். காலையில் தொண்டை கரகரப்பு இருந்தது. மெதுவாக உடல் சூடாக தொடங்கியது.
மதியத்திற்கு பிறகு தலைவலியும், காய்ச்சலும் அடிப்பதை உணர்ந்தேன். இதனால் உடனே எல்லோரும் செய்த அதே தவறை நானும் செய்தேன்.
மெடிக்கால் ஷாப்பிற்கு சென்று இரண்டு காய்ச்சல் தலைவலி மாத்திரை வாங்கி வந்தேன். அதில் ஒரு ஷெட்டை உடனே போட்டேன். காய்ச்சலும் சரியானது போல் இருந்தது.
எப்போதும் போல் அன்றைய நாள் வேலையை முடித்தேன். இரவு வரை நன்றாகவே இருந்தேன். இரவுக்கான மாத்திரையையும் சாப்பிட்டு விட்டு தூங்கினேன்.
உடல் வலி, சோர்வு, காய்ச்சல் அதிகம்
இதனால என் வேலையை என்னுடன் பணி புரியும் சக தோழர்களிடம் ஒப்படைத்து விட்டு, மீண்டும் தூங்கினேன்.
எனக்கு அப்போது இதுவரை நான் சந்திக்காத காய்ச்சலை சந்தித்தது போல் உணர்ந்தேன். கடுமையான உடல் வலி, தலைவலி, வயிற்றுப்போக்கு இருந்தது.
கொரோனா குறித்த செய்திகளை அதிகம் எழுதியவன் என்பதால் இது கொரோனாவாக இருக்குமோ என்று எனக்குள் ஒரு சந்தேகம் எழுந்தது.
உடனே தேனி நகர்புற ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்று அங்கு காய்ச்சல் அதிகமாக இருப்பதையும், உடல் வலி, சோர்வு இருப்பதையும் கூறினேன்.
மருத்துவர், என் அறிகுறிகளை கேட்டு விட்டு ஸ்வாப் டெஸ்ட் (கொரோனா பரிசோதனை) எடுக்க சொன்னார். அப்போதே நான் எப்போது வேண்டுமானாலும் மயங்கி விழுவேன் என்ற நிலையில் இருந்தேன்,
மயங்கி விழுந்தேன்
ஆனால் அப்போது எனக்கு உடலில் கொஞ்சம் கூட தெம்பு இல்லை. உணர்வற்றவனாக உடனே மயங்கி விழும் நிலைக்கு சென்றேன்.
உடனே என் நிலையை நான் சொன்ன உடன், எனக்கு குளுக்கோஸ் ஏற்றினார்கள். அத்துடன் என்னுடன் வந்த என் மாப்பிள்ளையிடம் ஜூஸ் வாங்கி வர சொன்னார்கள்.
அதன்படி எனக்கு அவரும் சாத்துக்குடி ஜூஸ் வாங்கி கொடுத்தார். உடல் ஓரளவு தெம்பானது. குளுக்கோஸ் ஏறிய பின்னர் உடம்புக்கு புதிய புத்துணர்ச்சி கிடைத்தது.
உண்மையில் எங்கள் தேனி அரசு மருத்துவமனையில் கவனிப்பு நன்றாக இருந்தது. அவர்களுக்கு என் ராயல் சல்யூட். நேராக வீட்டுக்கு சென்றேன். அங்கு யாரிடமும் பக்கத்தில் வர வேண்டாம் என்று ஒதுங்கி கொண்டேன்.
கொரோனா பாசிட்டிவ்
எனக்கு வந்திருப்பது கொரோனா தொற்று தான் என்று. அதன் பிறகு குடும்பத்தினரை விட்டு தனி அறையில் இருந்தேன். அன்று முழுவதும் எழவே முடியவில்லை.
கடுமையாக காய்ச்சல் மற்றும் உடல் வலி. மறுநாளும் காய்ச்சல், உடல் வலி, தலைவலி, அதற்கு அடுத்த நாள் ஒரளவு தெம்பாக மாறினேன். காய்ச்சல் குறைந்து இருந்தது.
ஆனால் இருமல் வர ஆரம்பித்தது. சுவை இழப்பும், அடிக்கடி மயக்கமும் ஏற்பட்டது.
நான் பரிசோதனை செய்ததில் இருந்து மூன்றாவது நாள் என் பரிசோதனை முடிவு வந்தது உங்களுக்கு கொரோனா பாசிட்டிவ் என்று கூறி அழைத்து சென்றார்கள்.
மூச்சுத்திணறல்
செல்போன், சார்ஜர், பக்கெட், கப், 5 செட் துணி, சோப்பு, ஆகியவற்றுடன் சென்றேன்.
அங்கு பரிசோதித்த மருத்துவர், பிபி, சுகர் எல்லாம் நார்மல் என்று கூறி, என் உடலில் பிரச்சனைகளை கேட்டு அதற்கான மருந்து கொடுத்தார்கள்.
என்னைப் போலவே பலரும் அன்று ஆம்புலன்சில் வந்து சேர்ந்தார்கள். பலர் இரவில் வரட்டு இருமலால் அலறினார்கள். சிலர் மூச்சுத் திணறலால் அவதிப்பட்டார்கள்.
நான் இருமல், மற்றும் மூச்சு திணறலால் அவதிப்பட்டேன். அடிக்கடி மயக்கமும் வந்தது. சாப்பாடு சரியாக சாப்பிடாவிட்டால் மயக்கம் வந்து விடும் நிலை இருந்தது.
மெதுவாக மாத்திரைகள் சாப்பிட சாப்பிட இயல்பு நிலைக்கு திரும்ப தொடங்கினேன். கோவிட் சென்டரில் எனக்கு ஆறுதலே செல்போன் மட்டும் தான். அதில் வீடியோக்களை பார்த்து பொழுதை கழித்தேன்.
மனைவிக்கும் பாதிப்பு
அவரும் கடுமையான காய்ச்சல், மயக்கம், தெம்பு, இல்லாத நிலையில் இருந்தார். அவருக்கு அவரது அம்மா வேண்டிய உதவிகளை செய்தார்.
இதற்கிடையே சரியாக ஐந்து நாளில் என் உடலில் இருந்த அனைத்து பிரச்சனைகளும் சரியானது போல் உணர தொடங்கினேன். ஆனால சுவாச பிரச்சனையும், இருமலும் போகவே இல்லை.
8 -ம் நாள் கூண்டில் இருந்து விடுதலையாகி வெளியே வந்த கிளியைப் போல் வெளி உலகை பார்த்தேன். நேராக என் வீட்டிற்கு சென்றேன்.
என் மனைவியும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர் என்பதால் வீட்டிலேயே இருந்தோம். எனக்கு கிட்டத்தட்ட 18 நாட்கள் கழித்து பழையபடி உடல்நிலை திரும்பியது போல் உணர்ந்தேன்.
அதாவது சுவை இழப்பு பழையபடி மாறியது. இருமல் நிற்க கிட்டத்தட்ட 20 நாட்கள் ஆனது. கடந்த ஒரு வாரமாக நன்றாக உள்ளேன்.
ஆனால் என்னை தொடர்ந்து என் குடும்பத்தில் மொத்தம் 5 பேர் கொரோனாவால் அடுத்தடுத்து பாதிக்கப்பட்டனர். அனைவரும் நல்லபடியாக குணமாகி விட்டனர்.
தீவிரமாக பாதிக்கவில்லை
எல்லாருமே பாதிப்பு வந்த மறுநாளே சோதனை செய்தவர்கள் என்பது அவர்களிடம் பேசியதில தெரிந்தது.
ஒரு வேளை நாங்கள் பரிசோதனை செய்ய தாமதித்து இருந்தாலோ, அல்லது சாப்பிட முடியவில்லை என்று கூறி சாப்பாட்ட சாப்பிடாமல் விட்டிருந்தாலோ விபரீதத்தில் முடிந்திருக்கும்.
இதில் ஆறுதலான விஷயம் யாரையும் தீவிரமாக பாதிக்கவில்லை என்பது தான். கொரோனாவால பாதிக்கப்பட்ட நான் வீட்டை விட்டு வெளியே செல்வது அபூர்வம்.
எப்போதாவது தான் வெளியில் செல்லக் கூடியவன் .எனக்கே தொற்று பாதித்து விட்டது.
எனவே வெளியில் செல்வது, முககவசம் அணியாமல் இருப்பது, உங்களை மட்டுமல்ல, உங்களை சுற்றியுள்ள யாரையோ மோசமாக பாதிக்கும் என்பது நிச்சயம் உண்மை. உங்களுக்கே அது தெரியாது.
உங்களால் யாரோ ஒருவரின் உயிருக்கு ஆபத்து வரக்கூடும். எனவே கொரோனா நம்மை தாக்காது.
அதெல்லாம் பொய். நான் நன்றாக இருக்கிறேன் என்றெல்லாம் பரிசோதனைக்கு செல்ல மறுக்காதீர்கள்.
அது நிச்சயம் பேராபத்தில் முடியும். நான் குணமாக காரணமாக இருந்த முகம் தெரியாத போடி பொறியியல் கல்லூரியில் இருந்த மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மை பணியாளர்கள்,. உணவளித்தவர்கள் என அனைவருக்கும் நன்றி. Oneindia
Thanks for Your Comments