நம் முன்னோர்கள் சொன்னது மூட நம்பிக்கை அல்ல உண்மையானது !

0

இரவில் செய்தாலும்  அரவில் செய்யாதே

இது ஒரு ஜோதிடப் பொன்மொழி. நல்ல காரியங்களை நாள் பார்த்துக் கோள் பார்த்துச் செய்வது நமது முன்னோர் வழக்கம். 

இரவில் செய்தாலும்  அரவில் செய்யாதே

அரவு என்றால் பாம்பு என்று பொருள். ஜாதகத்தில் ராகுவையும் கேதுவையும் அரவு என்பார்கள். ஒருநாளில் ஒன்றரை மணி நேரம் ராகு காலமும் ஒன்றரை மணி நேரம் எமகண்டமும் வரும். 

அந்த அரவு காலங்களில் நல்ல காரியங்கள் எதுவும் செய்யக் கூடாது என்பது ஜோதிட வல்லுநர்கள் கணித்துச் சொல்லும் நம்பிக்கை.  

இரவு நேரத்தில் ஒரு நல்ல காரியத்தைச் செய்தாலும் ராகு காலம் எமகண்டத்தில் செய்யக் கூடாது என்பதைச் சுட்டவே இரவில் செய்தாலும் அரவில் செய்யாதே என்றார்கள்.

இடிக்கற  வானம் பெய்யாது

இடிக்கற  வானம் பெய்யாது

இதில் ஒரு மழைக் குறிப்பும் உள்ளது. வாழ்வியல் அர்த்தமும் உள்ளது. வானில் மேகங்கள் ஒன்றோடு ஒன்று கலக்கும் போது மின்னோட்டம் உருவாகி இடி மின்னல் உருவாகிறதென பள்ளியில் படித்திருப்போம். 

அவ்வாறு ஒன்று கலக்கும் மேகங்களில் சில அதிக குளிர்ச்சியுடைய கருமேகங்களாக இருக்கும். சிலது, குளிர்ச்சியற்ற வெண் மேகங்களாக இருக்கும். 

இவை ஒன்றோடு ஒன்று கலந்தால் பொழியத் தயாராய் இருந்த கருமேகம் சூடாகி மேகமாகவே உறைந்திருக்கும். 

அதனால் மழைப் பொழிவு இருக்காது. வானில் இடிக்கிற வானம் பெய்யாமல், சிறு தூறலோடு ஓய்வது அதனால் தான். 

அது போலவே, சிலர் ‘அதைச் செய்வேன் இதைச் செய்வேன்‘ என வார்த்தைப் பந்தல் போடுவார்கள். 

ஆனால், காரியம் ஒன்றும் ஆகாது. அவர்கள் வாய்ச்சொல் வீரர்களாகவே இருப்பார்கள். இதனைக் குறிக்கவும் இடிக்கற வானம் பெய்யாது என்பார்கள்.

இம்பூரல் அறியாமல் இருமிச் செத்தான்

இம்பூரல் அறியாமல் இருமிச் செத்தான்

இம்பூரல் என்பதொரு மருத்துவ மூலிகை. கபத்தை அறுக்கும் அருமருந்து இது. எப்படிப்பட்ட இருமலாய் இருந்தாலும் இம்பூரல் உண்டால் அகலும். 

ரத்த வாந்தி எடுப்பவருக்கும் இம்பூரல் இன்மருந்து என்கிறார் சாட்டைமுனி என்ற சித்தர். 

வெள்ளை நிற சிறிய பூக்களையும் கொஞ்சம் அகன்று ஈட்டி வடிவத்திலான இலைகளையும் கொண்ட குறுஞ்செடி இது. 

தமிழகமெங்கும் தானாக வளரக்கூடியது. குறிப்பாக, மழைக் காலத்தில் நாம் வசிக்கும் இடங்களிலேயே மிகச் சாதாரணமாக வளரக்கூடிய ஒரு மூலிகை. 

தீராத இருமல் மற்றும் காசம் போன்ற கடுமையான நோய் உள்ளவர்கள் இம்பூரலை சித்த வைத்தியரின் அறிவுரையோடு தொடர்ந்து எடுத்துவர நோய் கட்டுப்படும். 

இதை விளக்கவே இம்பூரல் அறியாமல் இருமிச் செத்தான் என்றார்கள்.

தும்பை விட்டு வாலைப் பிடிக்காதே

தும்பை விட்டு வாலைப் பிடிக்காதே

இன்று பலருக்கு தும்பு என்றால் என்னவென தெரியாது. தென்னையின் நாரினால் செய்யப்படும் முறுக்குக் கயிரை தும்பு என்று சொல்வார்கள். 

மாட்டின் கழுத்தில் தும்புக் கயிறு இருக்கும். ஒரு மாட்டினைப் பிடிக்க வேண்டுமானால் அந்த தும்பை கெட்டியாகப் பிடித்தால் தான் அது நமக்குக் கட்டுப்படும். 

மாறாக தும்பைப் பிடிக்காமல் அதன் வாலைப் பிடித்தால் மாடு நமக்குக் கட்டுப்படாமல் வெகுண்டு ஓடும். அது போல, எந்த ஒரு விஷயத்தையுமே தக்க காலத்தில் செய்ய வேண்டும். 

பிற்பாடு செய்யலாம் என்று காத்துக் கொண்டிருந்தால் விஷயம் பாழாகி விடும். இதனை உணர்த்தவே தும்பை விட்டு வாலைப் பிடிக்காதே என்றார்கள்.

இரைக்கிறவன்

இரைக்கிறவன்

இளிச்சவாயன்னா மாடு மச்சான்னு சொல்லும் இது பிழைக்கத் தெரியாதவர்கள் நய்யாண்டி செய்யும் பழமொழி. 

கிணற்றில் ஏற்றம் போட்டு இரைக்கும் விவசாயி விவரமானவராக இருக்க வேண்டுமாம். அப்போது தான் மாடு ஒழுங்காக ஏற்றம் இரைக்கும். வயல் செழிக்கும். 

இரைப்பவர் ஏமாளியாய்  இருந்தால் மாடு மச்சான் முறை சொல்லி வேலை செய்யாமல் ஏய்க்குமாம். 

அது போல, எந்த விஷயமாய் இருந்தாலும் விவரமாய் இல்லா விட்டால் யாரும் ஏய்த்து விடுவார்கள் என்பது இந்தப் பழமொழி தரும் வாழ்வியல் விளக்கம்.

இரவு உண்ணாதவன் பருத்திருப்பான்

இரவு உண்ணாதவன் பருத்திருப்பான்

இந்தப் பழமொழியை பலர் கேட்டிருக்க மாட்டார்கள். ஆனால், அர்த்தமுள்ள ஆழமான பழமொழி. இரவில் வெறும் வயிற்றில் பட்டினியோடு படுக்கக் கூடாது. 

அப்படிப் படுத்தால் நள்ளிரவில் பசிக்கும். இதனால் தூக்கம் கெடும். தூக்கம் கெட்டால் உடலில் வளர்சிதை மாற்றங்கள் பாதிக்கப்படும். 

இதனால் ஹார்மோன் கோளாறுகள் உருவாகி உடல் எடை அதிகரிக்கும். 

எனவே, இரவில் சிறிதளவு உண்டு விட்டு உறங்குவதே மிகவும் நல்லது. இதை விளக்கவே இரவு உண்ணாதவன் பருத்திருப்பான் என்றார்கள்.

ஈசலடிச்சா மழை

ஈசலடிச்சா மழை

இதுவும் ஒரு விவசாயப் பழமொழி தான். மழையின் வரத்துக்கான அறிகுறிகள் தொடர்பாய் பல பழமொழிகளை முன்பே பார்த்தோம். 

இதுவும் அப்படியான ஒரு பழமொழி தான். ஈசல் அதிகமாகப் பறந்தால் மழை வரும் என்பது மருத நிலத்து நம்பிக்கைகளில் ஒன்று. 

அதில் உண்மையும் உள்ளது. ஈசல்கள் எனும் சிற்றுயிர்கள் உருவாகும் சீதோஷ்ணம் மழை வருவதற்குத் தோதானது தான். 

எனவே, எங்காவது ஈசல்கள் பார்த்தால் அங்கு மழை வரும் என்று நம் முன்னோர் சொன்னதில் மிகவும் அர்த்தம் உள்ளது.

இளமையில் பழக்கம் முதுமையில் சுபாவம்

இளமையில் பழக்கம் முதுமையில் சுபாவம்

யோசித்துப் பார்த்தால் நம் சுபாவம் என்பது ஒரு காலத்தில் நாம் பழகிக் கொண்டதே என்பது புரியும். இந்தப் பழமொழி அதைத் தான் சொல்கிறது. 

நல்ல பழக்கமோ கெட்ட பழக்கமோ அதை தொடங்குவதும் தொடர்வதும் நாம் தான். 

ஒரு பழக்கத்தை நாம் நாட்கணக்காய், வருடக்கணக்காய் தொடரும் போது முதுமையில் அதுவொரு சுபாவமாகவே மாறி விடுகிறது. 

பிற்பாடு அது நம் அடையாளமாகவும் ஆகி விடுகிறது. அதனால் தான் நல்ல விஷயங்களை இளமையிலேயே கல் என்றும் ஐந்தில் வளையாதது அறுபதில் வளையாது என்றும் சொல்கிறார்கள். 

இளமையில் பழக்கம் முதுமையில் சுபாவம் என்பதால், நல்ல பழக்கங்களையே நாம் கற்க வேண்டும். 

நம் குழந்தைகளுக்கும் கற்பிக்க வேண்டும். அதுவே பிற்பாடு அவர்கள் சுபாவமாக மாறியும் போகும்.

இளைத்த உடலுக்கு இரும்பைக் கொடு

இளைத்த உடலுக்கு இரும்பைக் கொடு

சிலருக்கு சிறுவயதிலேயே ஊட்டச்சத்துக் குறைபாட்டல் உடல் இளைத்திருக்கும். அவர்களுக்கு உடலுக்கு ஆரோக்கியம் சேர்க்கும் இரும்புச்சத்துள்ள உணவுகளைக் கொடுக்க வேண்டும். 

அதாவது, முருங்கைக்கீரை, பேரீச்சம்பழம், கறிவேப்பிலை போன்றவற்றை உணவில் கொடுத்தால் உடல் தேறும். 

மேலும், அவர்கள் இரும்பாலான உடற்பயிற்சி கருவிகளைக் கொண்டு உடற்பயிற்சி செய்து வந்தாலும் நன்றாகப் பசி எடுத்து நிறைய உண்டு ஆரோக்கியமாவார்கள். 

இதனை விளக்கவே இளைத்த உடலுக்கு இரும்பைக் கொடு என்றார்கள்.


Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings