கிரையோஜெனிக் உறக்கம் இப்படி ஒரு முறை இருக்குன்னு நமக்கு திரைப்படங்கள் வாயிலாகத் தான் தெரிய வந்துருக்கு.
1993ல் நான் கல்லூரியில் படிக்கும் பொழுது Demolition Man என்றொரு படம் வந்தது. அதில் இந்த நுட்பம் குறித்துக் காட்டியிருப்பார்கள்.
ஆனால் அதற்கு ஒரு வருடம் முன்பே 1992ல் Forever Young என்றொரு திரைப்படத்திலும் இதனைக் காட்டி யிருப்பார்கள். இப்படியொரு நுட்பம் இருக்கின்றது என்று காட்டிய முதல் திரைப்படம் இது தான்.
அதன் பின்னர் பல திரைப்படங்கள் வந்துள்ளன. ஏலியன், பேட்மேன், ஜேஸன் எக்ஸ், கேப்டன் அமெரிக்கா, அண்டர்வேர்ல்டு என்று பல திரைப்படங்களிலும் இதனைக் காட்டியிருப்பார்கள்.
1819ல் வாஷிங்டன் இர்வின் என்பார் எழுதிய ரிப் வான் விங்க்கிள் என்ற புத்தகத்தில் கூட இது போன்றதொரு உறக்கத்தினை கோடிட்டு காட்டியிருப்பார்.
கிரையோஜெனிக் உறக்கம் என்பது
இவ்வாறு நடைபெறுவதால் ஒரு மனிதனால் 100க்கும் மேற்பட்ட ஆண்டுகள் உறக்கத்திலேயே இருக்க முடியும். இதனால் 20 வயதில் உறங்கத் தொடங்கும் ஒரு நபர் 100 ஆண்டுகளுக்குப் பின்னும் அதே 20 வயது உடல் & ஆற்றலுடன் எழ முடியும்.
இதனால் ஆண்டுகள் கடந்து சென்றாலும் அவர் உடலளவில் அதே வயதில் தான் இருப்பார்.
சுருக்கமாகக் கூறினால், உங்கள் வயது, உடலை அப்படியே ஒரு 100 ஆண்டுகளுக்கு தற்காலிகமாக நிறுத்தி வைப்பது போன்றது தான் இந்த உறக்க முறை. விஞ்ஞானப்படி இம்முறை சாத்தியமான ஒன்று.
ஒருவர் தனது கையை இழந்தால் மீண்டும் அதை அவரது உடலுடன் இணைக்கும் வரை ஒரு ஐஸ் பெட்டியில் வைத்து குளிர்விக்கிறார்கள் அல்லவா?
அது போல் இந்த உயிர் போகாத உடலை ஐஸ், உப்பு & இன்ன பிற வேதி கலவைகளால் எந்தவித பாதிப்பும் ஏற்படாத வகையில் நீண்ட நாட்கள் பாதுகாக்க முடியும்.
இவ்வகை உறக்கத்தின் பயன் என்ன?
அதி தீவிரமாக இருக்கும் பொழுது நோயாளியை இந்த முறையைக் கொண்டு உறைந்து போகச் செய்து வைத்து விட்டால்,
பின்னர் நோய் தீர்க்கும் வழிமுறைகள் கண்டறிந்த காலத்தில் அவரை மீண்டும் உயிர்ப்பித்து அந்நோயைக் குணப்படுத்திக் கொண்டு வாழ வைக்கலாம்.
ஆனால், தற்போதைய நிலவரப்படி உயிருள்ள ஒருவரை அப்படி Cryonic Suspension ல் வைக்க சட்டம் அனுமதிப்பதில்லை.
சட்டப்படி இறந்து விட்டார் அதாவது Clinical Death என்று மருத்துவர் அறிவித்து விட்டால் அவரை க்ரையோனிக் சஸ்பென்ஷனில் வைக்கலாம். இறந்து போனவரை அப்படி வைத்து என்ன பயன்?
Clinically Death என்பது இதயம் தன் பணியை நிறுத்திக் கொள்வது தான். அதுவே முழுமையான மரணம் என்று சொல்லி விடமுடியாது.
அதன் பின்னரும் நம் மூளையின் செயல்பாடுகள் உயிர்ப்புடன் தான் இருக்கும். நம் உடல் அழிந்து பட்டுப் போவது என்பது நம் வளர்சிதை மாற்றத்தைப் பொறுத்தது.
நம் செல்கள் சிதைவடைவதை நிறுத்தி வைக்க முடிந்தால் நம் அழிவும் நிறுத்தி வைக்கப்படும். அப்படியொரு செயல்பாடு தான் இதில் மேற்கொள்ளப் படுகின்றது.
எந்தவித பாதிப்புமின்றி உறங்க வைத்து எதிர்காலத்தில் அவரை உறக்கத்திலிருந்து எழுப்பி மீண்டும் இழந்த உயிரை மீட்க முடியும்.
அதாவது, இன்று ஒரு உயிரைக் காக்கும் அளவுக்கு அதிநவீன மருத்துவ வசதி இல்லாவிட்டால் இம்முறையில் உடலைப் பாதுகாத்து வைத்து, அந்த மருத்துவ வசதி கண்டுபிடிக்கப் பட்டவுடன் உடலை மீண்டும் உயிர்ப்பித்து நோயை குணமாக்க முடியும்.
நம்ம தோனி ஸ்டைலில் சொன்னால், மேட்ச் தோக்குற மாதிரி சமயத்தில் கடைசி ஓவர் வரை எடுத்துச் சென்று வெற்றி பெற்றுத் தருவார் அல்லவா?
அதுபோல் குறிப்பிட்ட வசதிகள் கிடைக்கும் வரை உடலை உயிருடன் தற்காலிகமாக செயல்படாமல் நிறுத்தி வைக்கும் முறை. இதற்கு கோமா நிலையைக் கூட உதாரணமாகக் கூறலாம் என நினைக்கிறேன்.
க்ரையோனிக் உறக்கத்தில் பயன்படுத்தும் வாயுக்கள்
ஒருவர் இறந்து விட்டார் என்று மருத்துவரால் அறிவிக்கப் பட்டவுடன், க்ரையோனிக் சஸ்பென்ஷன் முறைக்கு எடுத்துச் செல்லப்படும் வரைக்கும், மூளைக்குத் தேவையான ஆக்சிஜனும் இரத்தமும் தொடர்ந்து செலுத்தப்படும்.
அதன் பின்னர் Heparin என்னும் மருந்து உடலினுள் ஏற்றப்படும். இது இரத்தத்தை உறையச் செய்வதிலிருந்து தடுக்கும் (Anticoagulant). இனி தான் உண்மையான உறைய வைத்தல் துவங்கும்.
உடலையும் சடாரென்று குளிர் நிலைக்குக் கொண்டு போய் விடமுடியாது. காரணம், உடல் செல்களில் இருக்கும் நீர் குளிர்நிலைக்குப் போனால், அது உறையத் துவங்கும். உறைந்தால் விரிவடையும்.
அதனால் செல்கள் சிதைவுறும். அதனால் என்ன செய்வார்கள் என்றால், செல்களில் இருக்கும் நீரை நீக்கி விட்டு Cryoprotectant எனப்படும் க்ளிசரால் (Ethylene Glycol போன்று) அடிப்படையிலான ஒரு வேதியற் கலவையை உட் செலுத்துவார்கள்.
ஆர்க்டிக் மற்றும் அண்டார்ட்டிகாவில் இருக்கும் சில பூச்சிகள், மீன்கள் மற்றும் நீர்நிலவாழ்வி (Ambibians) தாங்களே தங்கள் உடலில் இந்த Cryoprotectant யை உற்பத்தி செய்து கொள்ளும்.
க்ளைகால்ஸ் (Glycols) எனப்படுபவை குறைந்த பட்சம் இரண்டு ஹைட்ராக்சில் தொகுப்புகள் உள்ள ஆல்கஹால் ஆகும்.
எத்திலின் க்ளைக்கால் (Ethylene Glycol), ப்ரோப்பிலின் க்ளைக்கால் (Propylene Glycol) மற்றும் க்ளிஸரால் (Glycerol) போன்றவை அதற்கு உதாரணங்களாகும்.
இது குளிர்காலங்களில் தண்ணீர் உறைந்து அடைப்பு ஏற்படுவதைத் தடுக்கின்றது. இது சற்று ஆபத்தானது.
ப்ரொப்பிலின் க்ளைக்கால் மேற்சொன்ன எத்திலின் க்ளைக்காலை விட ஆபத்து வெகுவாகக் குறைந்தது. ஆபத்தற்ற உறை நிலைத் தடுப்பான் என்று பெயரிட்டே விற்பனைக்கும் வரும்.
எத்திலின் க்ளைக்கால் பயன்படுத்த முடியாத இடங்களில் இதனைப் பயன்படுத்துவார்கள்.
உணவுத் தயாரிப்பில் இது பயன்படும். குறிப்பாக பனிக்குழைவு (Ice Cream) தயாரிப்பில் பனிக்கட்டிகள் (Ice) உருவாகிடாமல் அது குழைவாகவே இருப்பதற்காக இதனைச் சேர்ப்பார்கள்.
இருப்பினும், இது காற்று மற்றும் வெப்பத்தோடு வினைபுரிந்து லாக்டிக் அமிலத்தை உற்பத்தி செய்யும். இதனைச் சரியாக சமநிலைப் படுத்தப்பட வில்லை என்றால் அரிக்கும் (Corrossive) தன்மையுடையதாக இருக்கும்.
மேற்சொன்ன இரண்டையும் விட பாதுகாப்பானதும் மிகக்குறைந்த உறை நிலையையும் கொண்ட க்ளிசராலே பெரிதும் பயன்படுத்தப் படுகின்றது. க்ரையோனிக் சஸ்பென்ஷனில் உடல் செல்களில் உள்ள நீருக்குப் பதிலாக இதனையும் பயன்படுத்துவார்கள்.
எதைப் பயன்படுத்தினாலும், நோக்கம் என்ன வென்றால், உறைநிலைக் குளிரில் செல்கள், திசுக்கள், உறுப்புகளுக்குள் பனிப்படிகங்கள் (Ice Crystals) உருவாவதைத் தடுப்பது தான்.
இப்படி ஏதேனும் ஒரு உறைநிலைக் கலவைக்குள் (திரவ நைட்ரஜன்) உடலைக் கொண்டு செல்லும் முன்
அதன் பின்னர், -130°Celcius அளவிலான வெப்பநிலையை எட்டும் வரைக்கும் உடலை உலர்பனிக் கட்டியில் (Dry Ice) வைப்பார்கள். இத்தோடு Vitrification செயல்பாடு முடிகின்றது.
அதற்குப் பின்னர் -196°Celcius வெப்ப நிலையளவில் திரவ நைட்ரஜன் நிரப்பப் பட்ட ஒரு பெரிய உருளைக்குள் உடலைத் தலைகீழாக நுழைத்து வைத்து விடுவார்கள்.
ஏன் தலைகீழாக என்றால், ஒரு வேளை உருளையில் ஏதேனும் கசிவு இருந்தால், தலைப்பகுதியில் இருக்கும் மூளை மட்டுமாவது இறுதி வரை பாதுகாப்பான குளிர் நிலையில் பத்திரமாக இருக்கட்டும் என்பதற்காக.
Thanks for Your Comments