இந்தியாவில் 270 வகையான பாம்புகள் உள்ளன. அவற்றில் 60 வகை பாம்புகள் விஷத்தன்மை கொண்டவை.
இந்தியாவில் ஏராளமான விஷமற்ற பாம்பு பலவகை உள்ளன. குறிப்பாக நீர்நிலை ஒட்டியுள்ள பகுதிகளில் பெரும்பாலும் வசிக்கின்றன.
ஏரிக்கரை, ஆற்றங்கரை, குளத்தங்கரை, வயல் வரப்புகள், கேணி ஒட்டிய பகுதிகள் போன்ற இடங்களில் இந்த விஷமற்ற பாம்புகள் காணப்படுகின்றன.
நீர்நிலைகளில் என்னென்ன வகையான பாம்புகள் உள்ளன? விஷமற்ற பாம்புகளைப் பற்றி முதலில் பார்ப்போம்
தண்ணீர் பாம்புகள்
கோரைப்பாம்பு (Olive Keelback Water Snake)
இது தெற்கு ஆசியாவில் காணப்படுகிறது. இதனை தமிழகத்தில் நீர்நிலை இடங்களில் காணலாம் .
வாழ்விடம்
தண்ணீரிலோ அல்லது சுற்றியுள்ள தாவரங்களுக்கு இடையிலோ வாழ்கின்றன.
பகலில் இரை தேடக்கூடி பாம்பு இது என்றாலும், இரவிலும் காணப்படுகிறது.
கையாளும் போது இந்த பாம்புகள் அரிதாகவே கடிக்கும் என்று அறியப்படுகிறது. கோடை காலத்தில் வளையில் நீண்ட துயில் கொள்கின்றன.
கண்டங்கண்டை நீர்க்கோலி (Checkered Keelback)
இப்பாம்புகள் ஆசியாவில் காணப்படுகினறன. இதனை நம் இல்லங்கள் கொல்லைப்புறத்தில் அல்லது சுற்றுப்புறத்தில் கூட நீங்கள் அடிக்கடி காணலாம்.
வாழ்விடம்
இந்தப் பாம்புகள் நன்னீர் ஏரிகள், ஆறுகள் போன்ற இடங்களின் அருகில் காணப்படுகின்றன. இதன் உணவு சிறிய மீன் மற்றும் நீர்த் தவளைகள் ஆகும்.
நாய்த் தலையன் நீர் பாம்பு (dog-faced water snake)
நாய்த் தலையன் என்பது ஒரு நஞ்சில்லா பாம்பு ஆகும். ஆசியா மற்றும் ஆஸ்திரேலியா கண்டங்களில் நீர்நிலைப்பகுதிகளில் காணப்படும்.
பொதுவாக இப்பாம்புகள் சதுப்பு நிலக்காடுகள், கழிமுகங்கள், நீரோடைகள், குளங்கள், பாசித்திட்டுகள், போன்ற இடங்களிலும், அருகில் உள்ள நிலத்தில் உள்ள வளைகளில் கண்டறியப்பட்டுள்ளது.
இவை இரவில் இரை தேடும் விலங்குகள் என்றபோதிலும், சிலசமயம் பகல் நேரத்திலும் இரை தேடும்.
இதன் முதன்மை உணவு மீன் ஆகும். இவை தண்ணீர் அல்லது தரையில் 8 முதல் 30 வரையான எண்ணிக்கையில் குட்டிகளை ஈனுவதாக அறியப்படுகிறது.
சாரைப்பாம்பு
சாரைகள் ஏரிகள், ஆறுகளில் காணலாம். அங்கு தவளைகள், எலிகள் மற்றும் மீன்கள் ஆகியவற்றைப் உண்பதற்க்காக அந்த பகுதிகளுக்கு வருகிறது.
விஷ பாம்புகள்
விஷ பாம்புகளில் இருவகையான பாம்புகள் நீர்நிலைகளில் பகுதிகளில் அதிகமாக வசிக்கின்றன.
இரு பாம்புகளில் ஒன்று இந்திய நாகம் மற்றொன்று கட்டுவிரியன் ஆகும்
இந்திய நாகம்
இது அடர்த்தியான அல்லது திறந்த காடுகள், சமவெளிகள், விவசாய நிலங்கள், பாறை நிலப்பரப்பு, ஈரநிலங்கள் போன்றவற்றில் காணப்படுகிறது.
விருப்பமான மறைவிடங்கள், மரகட்டுகள், மர ஓட்டைகள், கரையான மேடுகள், பாறைக் குவியல்கள் போன்ற இடங்கள் ஆகும் .
மேலும் இது கடல்கள் முதல் கிராமங்கள் மற்றும் நகர புறநகர்ப் பகுதிகள் போன்ற அதிக மக்கள் தொகை கொண்ட நகர்ப்புறங்களில் கூட காணப்படுகிறது.
இந்திய நாகப்பாம்பு பெரும்பாலும் தண்ணீருக்கு அருகிலேயே காணப்படுகிறது. இதனை ஏரிகள், ஆறுகள்,குளங்கள், வயல் வரப்புகளில் அதிகம் காணலாம்.
ஏனெனில் வயல்களில் எலிகள் அதிகமாக பயிர்களை சேதப்படுத்தி நெற்பயிர்களை உண்ணும்.
ஆதலால், நாகப்பாம்புகள் எலியினை தனது இரையாக்க அங்கே வருகிறது. ஒரு வகையில் பாம்புகள் விவசாயிகளின் நண்பன் என்றே சொல்லலாம்.
கட்டுவிரியன் ((Common Krait)
கொடிய நஞ்சினையுடைய இப்பாம்பு பெரு நான்கு விஷமுடைய பாம்புகளில் இதுவும் ஒன்று.
வாழிடம்
பொதுவாக வயல்களிலும் எலி வளை, கரையான் புற்று, கற்குவியல் போன்ற இடங்களில் இவை காணப்படுகின்றன மற்றும் நீர்நிலைகளுக்கு அருகிலும் இவை காணப்படுகின்றன.
Thanks for Your Comments