நகைச்சுவை நடிகர் மயில்சாமி உடல்நலக் குறைவால் உயிரிழந்தது திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தீவிர சிவ பக்தரான 57 வயதான நடிகர் மயில்சாமி, சிவராத்திரியையொட்டி சென்னையை அடுத்த கேளம்பாக்கத்தில் உள்ள சிவன் கோயிலுக்கு சென்றுள்ளார்.
சிவராத்திரி பூஜையில் பங்கேற்று விட்டு வீடு திரும்பும் வழியில் அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து உடனடியாக போரூரில் உள்ள ராமச்சந்திரா மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். ஆனால், மருத்துவர்கள் பரிசோதனை செய்து பார்த்த போது மயில்சாமி ஏற்கனவே இறந்து விட்டது தெரியவந்தது.
மயில்சாமியின் மறைவுக்கு சக நடிகர்கள் மற்றும் பொதுமக்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மயில்சாமியின் மறைவுக்கு நடிகர் சரத்குமார் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள சரத்குமார், எனது அன்பு நண்பரும், மிகச்சிறந்த மனிதரும், தமிழ் திரையுலகின் முன்னணி நகைச்சுவை நட்சத்திரமும்,
சிறந்த விரிவுரையாளருமான மயில்சாமி திடீர் உடல்நலக் குறைவால் மறைந்த செய்தி பேரதிர்ச்சியும், தீராத மனவேதனையும் அளிக்கிறது எனக் குறிப்பிட்டார்.
மேலும் அன்பு நண்பர் மயில்சாமி அவர்களை பிரிந்து வேதனையில் வாடும் அவரது குடும்பத்தார், உறவினர்கள், நண்பர்கள்
மற்றும் கலைத் துறையினருக்கு என் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் என தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
ஈரோடு மாவட்டம் சத்திய மங்கலத்தில் கடந்த 1965-ம் ஆண்டு அக்டோபர் 2-ந் தேதி பிறந்தவர் மயில்சாமி.
நடிப்பின் மீது கொண்ட ஆர்வம் காரணமாக சிறு வயதில் இருந்தே மேடை நாடகங்களின் நடித்து வந்த மயில்சாமிக்கு கடந்த 1985-ம் ஆண்டு தான் சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
அந்த வகையில் மயில்சாமி தமிழில் முதன்முதலில் நடித்த திரைப்படம் கன்னிராசி.
பிரபு மற்றும் ரேவதி ஹீரோ, ஹீரோயினாக நடித்திருந்த இப்படத்தில் டெலிவரி பாயாக ஒரு சின்ன வேடத்தில் நடித்திருந்தார் மயில்சாமி.
இதையடுத்து கமலுடன் அபூர்வ சகோதரர்கள், வெற்றி விழா போன்ற படங்களிலும் ரஜினிகாந்துடன் பணக்காரன், உழைப்பாளி போன்ற திரைப்படங்களிலும் நடித்துள்ள மயில்சாமி,
விவேக், வடிவேலு போன்ற முன்னணி காமெடி நடிகர்களுடன் இணைந்து பணியாற்றிய பின்னர் தான் மக்கள் மத்தியில் பேமஸ் ஆனார்.
இவர்களுடன் மயில்சாமி இணைந்து நடித்த தூள், 12பி, வசீகரா, கிரி, ரெண்டு, திமிரு, மலைக்கோட்டை போன்ற படங்களின் காமெடி காட்சிகள் இன்றளவும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.
தனுஷின் பொல்லாதவன் படத்தில் குடிகாரனாக நடித்து இவர் செய்யும் அலப்பறைகளை ரசிக்காத ஆள் இருக்க முடியாது.
அதே போல் சிம்புவுடன் ஒஸ்தி படத்தில் போலீஸாக நடித்து காமெடியில் கலக்கி இருப்பார் மயில்.
தூள் படத்தில் நடிகர் விவேக்கை ஏமாற்றி திருப்பதியில் லட்டுக்கு பதிலாக ஜிலேபி கொடுக்கப் படுவதாக மயில்சாமி செய்த காமெடி அலப்பறை ரசிகர்களை வயிறுகுலுங்க சிரிக்க வைத்தன.
நடிகர் மயில்சாமி நடிப்பில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் உடன்பால். கடந்தாண்டு இப்படம் நேரடியாக ஓடிடி தளங்களில் ரிலீஸ் ஆனது.
இவர் நடித்து கடைசியாக திரையரங்கில் ரிலீசான படம் தி லெஜண்ட். சரவணன் அருள் நாயகனாக நடித்திருந்த அப்படத்தில் நகைச்சுவை வேடத்தில் நடித்திருந்தார் மயில்சாமி.
இவருக்கு சிறந்த நகைச்சுவை நடிகருக்கான தமிழக அரசின் விருதும் கிடைத்துள்ளது. கடந்த 2004-ம் ஆண்டு ரிலீஸ் ஆன கண்களால் கைது செய் திரைப்படத்துக்காக அவருக்கு இவ்விருது வழங்கப்பட்டது.
நடிகர் மயில்சாமி அசத்தப்போவது யாரு என்கிற சின்னத்திரை நிகழ்ச்சியில் தொகுப்பாளராகவும் பணியாற்றி உள்ளார்.
தமிழில் 200-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள மயில்சாமி, செல்வா, நியூ, உள்ளம் கொள்ளை போகுதே போன்ற சில படங்களில் டப்பிங் கலைஞராகவும் பணியாற்றி இருக்கிறார்.
மயில்சாமியின் மகன் அன்புவும் தற்போது சினிமாவில் ஹீரோவாக நடித்து வருகிறார். இப்படி சினிமாவில் புகழ்பெற்ற நகைச்சுவை கலைஞனாக வலம் வந்த மயில்சாமி இன்று மாரடைப்பால் மரணமடைந்துள்ளது
தமிழ் திரையுலகினரை பேரதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. 57 வயதில் மரணமடைந்துள்ள மயில்சாமிக்கு ஏராளமான திரையுலக பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
Thanks for Your Comments