அன்பு ஜோதி ஆசிரம வழக்கு விஸ்வரூபம் எடுத்துள்ளது.. இது தொடர்பாக சட்டரீதியான வழக்கு விசாரணை ஒருபுறமும், சிபிசிஐடி போலீசாரின் விசாரணை மறுபுறமும் என கொந்தளித்து கிடக்கிறது.
இந்த ஆசிரமம் தொடர்பான மேலும் சில விவரங்களும் வெளியாகி, கலங்கடித்து கொண்டு இருக்கின்றன.
கேரளா மாநிலம் எர்ணாகுளத்தைச் சேர்ந்தவர் ஜூபன்பேபி.
இவர் விழுப்புரம் மாவட்டம் குண்டலப் புலியூரில் கடந்த 2004ம் ஆண்டு முதல் அன்பு ஜோதி ஆசிரமத்தை தொடங்கி நடத்தி வந்தார்.
இந்த காப்பகத்தில் விட்டிருந்த தன்னுடைய மாமனார் ஜாபருல்லாவை காணவில்லை என்று ஒருவர் ஹைகோர்ட் வரை சென்றார்.
அப்போது தான், இந்த அன்பு ஜோதி ஆசிரமத்தின் வண்டவாளம் வெளியே தெரிய ஆரம்பித்தது.
மர்மான அன்பு ஜோதி ஆசிரமம்.
போலீஸார் ஆசிரம விவகாரத்தை சீரியஸாக அணுகிஉள்ள நிலையில், அங்கு அரங்கேறிய கொடூரங்கள் ஒவ்வொன்றும் வெளியாகி பலரையும் பதற வைத்திருக்கிறது.
இங்குள்ள வயதானவர்களை சங்கிலியால் கட்டிப் போட்டு சித்ரவதை செய்துள்ளார்கள். மாற்றுத் திறனாளிகளை அடித்து துன்புறுத்தி உள்ளார்கள். ஆதரவற்றவர்கள் என்பதால், ஏகப்பட்ட கொடுமைகளை செய்திருக்கிறார்கள்.
பெண்களுக்கு பாலியல் கொடுமை தரப்பட்டுள்ளது. இவர்களை கடித்து குதறுவதற்காகவே குரங்குகளை ஆசிரமத்தில் வளர்த்து வந்திருக்கிறார்கள்.
இந்த ஆசிரமத்தில் பலர் காணாமல் போனதாக திடீரென குற்றச்சாட்டு எழுந்ததை யடுத்து, கடந்த 10ம் தேதி ஆசிரம நிர்வாகி உள்ளிட்ட 9 பேர் மீது கெடார் போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
ஆசிரமத்தில் தேசிய மற்றும் மாநில மகளிர் ஆணையமும் நேரில் விசாரணை நடத்தி அங்கு பெண்கள் பலாத்காரம் செய்யப் பட்டிருந்ததை உறுதி செய்தனர்.
பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண்கள், துன்புறுத்தலுக்கு ஆளான மனநலம் பாதிக்கப்பட்ட 16 பெண்கள் முண்டியம் பாக்கம் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர்கள் கல்பாக்கம் அரசு காப்பகத்திற்கு மாற்றப் பட்டனர்.
நேற்று முன்தினம் இரவு 8 பேரை 3 நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி கோரி தாக்கல் செய்த மனுவானது, இன்றைய தினம் விசாரணைக்கு வரவுள்ளது.
இதுவரை 6 பேர் காணாமல் போனதாக கெடார் போலீஸ் ஸ்டேஷனில் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப் பட்டுள்ளது.
அதில் ஈரோடு மாவட்டம் சத்திய மங்கலத்தை சேர்ந்த ஜாபாருல்லா, 70, தென்காசி மாவட்டம் சங்கரன் கோயில் பகுதியைச் சேர்ந்த
லட்சுமி அம்மாள் 85, அவரது மகன் முத்து விநாயகம்., 48, ஆகியோரின் போட்டோக்களையும் வெளியிட்டு தேடி வருகின்றனர்.
விழுப்புரம் மட்டுமின்றி சேலம், கள்ளக்குறிச்சி உள்பட மாவட்டங்களிலும் இவர்களின் போட்டோக்களை பொதுமக்கள் பார்வையில் ஒட்டப்பட்டு போலீசார் தேடி கொண்டிருக்கிறார்கள்.
ஆசிரம நிர்வாகி ஜூபன்பேபி, பெங்களூருவில் தன்னுடைய நண்பர் ஆட்டோ ராஜா நடத்தும் ஆசிரமத்திற்கு ஜாபருல்லா உள்ளிட்ட 53 பேர் அனுப்பி வைக்கப் பட்டதாக விசாரணையில் கூறியிருந்தார்.
ஆனால், ஆசிரமத்தில் சேர்க்கப் பட்டிருந்த ஜாபருல்லா உள்ளிட்ட 11 பேர் மட்டும் திடீரென காணாமல் போயுள்ளனர். அவர்கள் கதி என்ன என்பதே இதுவரை தெரியவில்லை.
எனவே, சிபிசிஐடி போலீசார் 7 பேர் கொண்ட குழுவினர் விழுப்புரத்தில் இருந்து பெங்களூருவுக்கு நேற்று முன்தினம் சென்று, அங்குள்ள தொட்டக்குப்பி ஆட்டோ ராஜாவுக்கு சொந்தமான ஆசிரமத்தில் விசாரணையும் மேற்கொண்டனர்.
11 பேர் மாயமானவர்கள் குறித்து உள்ளூர் போலீஸுக்கு புகார் எதுவும் தரப்பட்டதா? என்ற விசாரணையையும் மேற்கொண்டுள்ளனர்.
அத்துடன் சில சட்டப்பூர்வமான ஆவணங்களை போலீசார் கைப்பற்றி இருக்கிறார்களாம். அதை பற்றியும் விசாரித்து வருகின்றனர். இப்போது இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது.
அப்போது இந்த ஆசிரமம் குறித்து மேலும் சில தகவல்களும் வெளியாகி வருகின்றன. காப்பகத்தில் இருந்தவர்களுக்கு ரேஷன் அரிசியில் தான் சாப்பாடு போட்டிருக்கிறார்கள்.
இதற்காக மூட்டை மூட்டைகளாக ரேஷன் அரிசி ஆசிரமத்தில் இருந்ததும் போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்தது..
மனநலம் பாதிக்கப் பட்டவர்கள் கட்டப்பட்ட சங்கிலிகள், அவர்களை தாக்குதலுக்கு பயன்படுத்திய தடிகள், கம்புகள் உள்ளிட்ட பொருட்களை சிபிசிஐடி போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
இந்த சோதனையின் போது, தடயவியல் துறை அதிகாரிகளும் உடனிருந்திருக் கிறார்கள். எனவே, அங்கிருந்த பொருட்களையும் சோதனைக்கு உட்படுத்த உள்ளனர்.
அப்போது ஆசிரமத்திற்கு அருகே ரத்தக்கறை படிந்த பாய் ஒன்று கிடந்ததாம். அதை பார்த்து மொத்த பேருக்கும் தூக்கி வாரிப் போட்டுள்ளது.
15 வருடங்களாக, லைசென்ஸ் எதுவுமே இல்லாமல் இந்த ஆசிரமத்தை நடத்தி வந்தது எப்படி? என்ற கேள்வி தான் பலரையும் உலுக்கி எடுத்து வருகிறது.
எனவே, கைதாகி உள்ள ஆசிரம ஓனர் ஜூபின் பேபி, அவரின் மனைவி மரியா ஜூபின் உட்பட 9 பேரிடம் இதை பற்றியெல்லாம் விசாரிக்க முடிவு செய்துள்ளனர்.
அவர்களை காவலில் எடுத்து விசாரிக்கும் போது, மேலும் பல தகவல்கள் வெளிவரக்கூடும் என்று நம்பப்படுகிறது. கடந்த வருடமே இந்த ஆசிரம ஓனர் கைதாகி இருக்கிறார்.
கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் என்கிற இடத்தில் மலையடிவாரத்தில் ஆசிரமத்தை வைத்து நடத்தி வந்திருக்கிறார்.
விழுப்புரம், செங்கல்பட்டு, பெங்களூர் என இவருக்கு மொத்தம் 3 இடத்தில் ஆசிரமம் உள்ளது. இதில், கோவையில் நடத்திவந்த ஆசிரமத்தில் கடந்த வருடம் புகார் வெடித்துள்ளது.
கோவை காந்திபுரம் ரயில்வே ஸ்டேஷன், டவுன்ஹால், உக்கடம், லட்சுமி மில் போன்ற பகுதிகளில் சுற்றித் திரிந்து யாசகம் கேட்டவர்களை எல்லாம் இழுத்து கொண்டு இங்கு வந்து அடைத்து வைத்திருக்கிறார்கள்.
அதாவது, கோவில் முன்பு உட்கார்ந்திருந்தவர்கள், பேப்பர் படித்து கொண்டிருந்தவர்களை எல்லாம் வலுக்கட்டாயமாக வாகனத்தில் தூக்கி போட்டு இங்கு கொண்டு வந்து அடைத்திருக்கிறார்கள்.
இரவு நேரத்தில் ஆசிரமத்துக் குள்ளிருந்து அலறல் சத்தம் விடிய விடிய கேட்டுக் கொண்டே இருக்குமாம்..
இதனால் நடுங்கிப்போன சுற்றுவட்டார பழங்குடி மக்கள், போலீசுக்கு தகவல் தந்துள்ளனர். இந்த விஷயத்தை கேள்விப் பட்டதுமே பொதுமக்கள் கொந்தளித்து விட்டனர்.
மலைடிவாரத்தில் குவிந்து ஆவேச முழக்கமிடவும், அவர்களை கட்டுப்படுத்த போலீசார் அதிக அளவு குவிக்கும் அளவுக்கு நிலைமை சென்றது.
இங்கு கொண்டு வந்து அடைத்ததுமே, அவர்களிடம் இருந்த பொருட்கள் பணம், செல்போனை பிடுங்கி, அவைகளுக்கு தீ வைத்து கொளுத்தி உள்ளனர். பிறகு எல்லாருக்கும் மொட்டை அடித்துள்ளனர்.
எதிர்த்து யாராவது சத்தம் போட்டால் சவுக்காலேயே அடித்து விளாசியும் உள்ளனர். இதனால் உடம்பெல்லாம் கொப்பளங்கள் ஏற்பட்டு, புண்களால் அவதிப்பட்டு வந்துள்ளனர்.
இந்த விவகாரம் தொடர்பாக அப்போதே ஓனரை கைது செய்தனர். ஆனாலும், அதே பிரச்சனை இப்போது விழுப்புரத்திலும் எழுந்துள்ளதால், விஷயம் வேறு எங்கோ இடிக்கிறதே என்ற சந்தேகம் வலுத்து வருகிறது.
யாராக இருந்தாலும் சரி, எந்த பின்னணியாக இருந்தாலும், மனசாட்சியே இல்லாமல் சித்ரவதைகளை அரங்கேற்றிய கொடூரர்களுக்கு உரிய தண்டனை கிடைக்க வேண்டும்,
காணாமல் போனவர்களை உடனடியாக கண்டுபிடித்து மீட்க வேண்டும் என்பதே அனைவரின் ஆதங்க குரலாக வெடித்து கிளம்பி உள்ளது.
Thanks for Your Comments