நாகூர் அருகே பட்டினச்சேரி கடற்கரையில் 2 முறை குழாய் உடைப்பால் கச்சா எண்ணெய் கசிந்த நிலையில் இன்று 3வது முறையாக மீண்டும் கச்சா எண்ணெய் கசிந்துள்ளது. இதனால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
நாகப்பட்டினம் மாவட்டம் நாகூரை அடுத்த நரிமணத்தில் பொதுத்துறை நிறுவனமான சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் சுத்திகரிப்பு நிலையம் (சிபிசிஎல்) உள்ளது.
ஓஎன்ஜிசி நிறுவனத்தால் எடுக்கப்படும் கச்சா எண்ணெய் இங்கு சுத்திகரிக்கப் படுகிறது. இங்கு சுத்திரிகரிக்கப்படும் கச்சா எண்ணெய் லாரி, கப்பல்களில் கொண்டு செல்லப்படும்.
இவ்வாறு இந்த எண்ணெய் வெளி மாநிலங்களுக்கும், தமிழ்நாட்டின் வெவ்வேறு இடங்களுக்கும் அனுப்பப்பட்டு வருகிறது.
அழிவின் விளிம்பில் பவளப்பாறைகள்... கடலின் பாதுகாவலன் !
இதற்கிடையே கப்பல்களுக்கு கச்சா எண்ணெய் கொண்டு செல்ல நரிமணம் சிபிசிஎல் நிறுவனத்தில் இருந்து சாமந்தான் பேட்டை வழியாக நாகூர் பட்டினச்சேரி மீனவ கிராமம் வரை குழாய் பதிக்கப் பட்டுள்ளது.
கடந்த 2ம் தேதி நள்ளிரவு பட்டினச்சேரி கடற்கரையில் குழாயில் உடைப்பு ஏற்பட்டு கச்சா எண்ணெய் வெளியேறி கடலில் கலந்தது. இதையடுத்து அதிகாரிகள் உடனடியாக சென்று உடைப்பை சரி செய்தனர்.
அதன்பிறகு உடைப்பு ஏற்படாது என அதிகாரிகள் கூறி சென்றனர். இந்நிலையில் தான் உடைப்பு சரி செய்யப்பட்ட குழாயில் இருந்து மீண்டும் கச்சா எண்ணெய் கசிந்தது.
மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து கடலில் கலந்த கச்சா எண்ணெய் அகற்றப்பட்டதோடு உடைப்பு சரி செய்யப்பட்டது.
இந்நிலையில் தான் இன்று 3வது முறையாக நாகை மாவட்டம் பட்டினச்சேரி கடற்கரையில் மீண்டும் கச்சா எண்ணெய் கசிவு ஏற்பட்டுள்ளது.
கச்சா எண்ணெய் கசிவை 2 முறை சரி செய்ததாக சிபிசிஎல் அறிவித்த நிலையில் மீண்டும் கசிவு ஏற்பட்டுள்ளதால் மக்கள் கோபம் அடைந்துள்னளர்.
மேலும் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என அவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
இந்த குழாயில் கச்சா எண்ணெய் செலுத்த மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளதாக கூறப்படும் நிலையில் இன்று பம்பிங் செய்யப் பட்டுள்ளதாக தெரிகிறது.
இதையடுத்து தான் குழாயில் கசிவு ஏற்பட்டுள்தாக கூறப்படுகிறது. இதனால் அங்கு மீண்டும் அதிகாரிகள் விரைந்துள்ளனர்.
Thanks for Your Comments