வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தாலுகா அல்லேரிமலை பகுதியில் உள்ள அத்திமரத்து கொல்லை மலை கிராமத்தை சேர்ந்தவர் விஜி. கூலி தொழிலாளியாவார்.
இவரது மனைவி பிரியா. இவர்களது ஒன்றரை வயது பெண் குழந்தை தனுஷ்கா. கடந்த 26ம் தேதி இரவு விஜி தனது மனைவி பிரியா மற்றும் குழந்தை தனுஷ்கா உடன் காற்றுக்காக வீட்டுக்கு வெளியில் படுத்து தூங்கி உள்ளார்.
இரவு 10 மணியளவில் குழந்தை தனுஷ்காவை பாம்பு கடித்திருக்கிறது. அழுகை சத்தம் கேட்டு எழுந்தவர்கள் பாம்பு கடித்ததை அறிந்து குழந்தையை தூக்கிக் கொண்டு பைக்கில் மருத்துவ மனைக்கு புறப்பட்டனர்.
சிறிது தூரத்துக்கு மேல் பைக் செல்ல முடியவில்லை. இதனால் குழந்தையை கையில் தூக்கிக் கொண்டு மலையில் இருந்து அடிவாரத்திற்கு வந்தனர்.
அங்கிருந்து அணைக்கட்டு அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென்று சிகிச்சைக்கு அனுமதித்தனர். பின்னர் ஆம்புலன்ஸ் மூலம் வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்துள்ளார்கள்.
அங்கு பரிசோதித்த டாக்டர்கள் வழியிலேயே குழந்தை இறந்து விட்டதாக கூறியுள்ளனர். இது குறித்து அணைக்கட்டு போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினர்.
இந்நிலையில் குழந்தையின் உடல் பிரேத பரிசோதனை முடிந்து ஆம்புலன்சில் எடுத்து வரப்பட்டது. அல்லேரி மலையடிவாரம் வரை கொண்டு வரப்பட்டது.
பின்னர் ஆம்புலன்ஸ் செல்ல பாதை இல்லாததால், அங்கேயே பெற்றோரிடம் ஒப்படைத்து விட்டு சென்றனர்.
பின்னர் குழந்தையின் உடலை பெற்றோர் கையில் தூக்கியபடி மலைப் பகுதியில் சுமார் 10 கிலோ மீட்டர் தூரம் நடந்தே வீட்டிற்கு சென்றனர்.
இதையடுத்து மாலை குழந்தை தனுஷ்காவின் உடல் மலைப் பகுதியில் அடக்கம் செய்யப்பட்டது.
இந்த வீடியோ மற்றும் செய்தி வெளியான நிலையில், கடும் விமர்சனம் எழுந்தது. அரசு உடனடியாக சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது.
Thanks for Your Comments