ஈரோடு மாவட்டம் பர்கூர் மலைப்பகுதியில் 30க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இங்கு ஏராளமானோர் வசித்து வருகின்றனர்.
இங்குள்ள மலை கிராமங்களில் ஒன்றான ஒன்னக்கரையில் சின்ன மாதையன் மற்றும் அவரது மனைவி சாந்தி வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 7 மகன்கள்,5 மகள்கள் என மொத்தம் 12 குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு 13வதாக சாந்திக்கு ஆண் குழந்தை பிறந்தது. இதனை தொடர்ந்து இவர்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் முயற்சித்தனர்.
சாந்திக்கு ரத்த சோகை இருந்ததால் அவருக்கு சிகிச்சை மேற்கொள்வதில் சிரமம் இருந்தது. இதனால் சின்ன மாதையனுக்கு அறுவை சிகிச்சை செய்ய முயற்சித்தனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த சின்ன மாதையன் வனப்பகுதிக்குள் சென்று ஒழிந்து கொண்டார். மருத்துவக் குழுவினர் எவ்வளோ முயற்சித்தும் அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய முடியவில்லை.
இதனை தொடர்ந்து காவல் மற்றும் வருவாய்த் துறையினரின் உதவியுடன் பெரும் போராட்டத்திற்கு பின்னர் சின்ன மாதையன் அறுவை சிகிச்சை செய்ய ஒத்துக் கொண்டார்.
இதனையடுத்து சின்ன மாதையனுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இச்சம்பவம் அப்பகுதியில் பேசு பொருளாக உள்ளது.
Thanks for Your Comments