உலகிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட தீவுகளில் ஒன்றாக கருதப்படும், சாண்டா குரூஸ் டெல் ஐசொலேட் (தீவு) கொலம்பியாவின் சான் பெர்னார்டோ தீவுக்கூடத்தில் மொரோஸ்குவில்லோ வளைகுடாவில் அமைந்துள்ளது.
இதனால் தூரத்தில் இருந்து பார்க்க இந்த தீவு கடல் நீரின் மேல் மிதந்து கொண்டிருப்பது போல இருக்கும். கரீபியன் கடல் பகுதியில் அமைந்திருக்கும் இந்த தீவானது சுமார் இரண்டரை ஏக்கர் பரப்பளவில் அமைந்திருக்கிறது.
இங்கு சுமார் 1200 பேர் வசிக்கின்றனர். சுமார் ஒரு நூற்றாண்டுக்கு முன்னர் இங்கு மீன்பிடிக்க வந்த மீனவர்கள் இந்த தீவினை கண்டு பிடித்துள்ளனர்.
பவளத்தின் மேல் அமைந்திருந்த இந்த அழகிய பரப்பில், கொசுக்களின் தொல்லை இல்லை என்பதால் இங்கு மனிதர்கள் குடியேற தொடங்கினர். இங்கு குடியேறிய குடும்பங்கள் பெருகத் தொடங்கியது.
பெரும்பாலும் மக்கள் இந்த தீவை விட்டு வெளியேறவில்லை. நகரின் சச்சரவுகளில் இருந்து விடுபட்டு இருப்பதே இதற்கு முக்கிய காரணம்.
எளிதாக சொல்ல வேண்டும் என்றால், வாழத் தகுதியான ஒரு அமைதியான தீவு இந்த சாண்டா க்ரூஸ். இந்த தீவில் வாழும் 1200 பேரும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள்.
அதாவது, ரத்த சொந்தமாகவோ, திருமணம் வாயிலாகவோ, ஏதாவது ஒரு வகையில் ஒருவரோடு ஒருவர் உறவினர்களாக இருக்கிறார்கள். இங்கு வசிப்பவர்களுக்கு மொத்தம் ஆறு குடும்பப் பெயர்கள் இருக்கிறது.
எலுமிச்சை பச்சை, நீலம், மஞ்சள் நிறங்களில் பெயிண்ட் அடிக்கப்பட்ட வீடுகள் இருக்கின்றன. அடுத்தடுத்த தலைமுறையினருக்கு இந்த வீடுகள் வழி வழியாக வழங்கப் படுகிறது.
தீவின் பரப்பளவு சிறியது என்பதால் இங்கு மேலும் புதிய வீடுகள் கட்ட இடமில்லை. அப்படி இடப்பற்றாக்குறை ஏற்பட்டால், வீடுகளில் இரண்டாம் தளம், மூன்றாம் தளம் என தான் நீட்டிக்கின்றனர்.
இந்த தீவில் வெளியாட்களை காண முடியாது. அதே போல ஒரு வீட்டில் குறைந்தது 10 பேர் வசிக்கின்றனர். இந்த தீவில் திருட்டு போன்ற குற்றங்கள் இல்லை. இதனால் யாரும் தங்கள் வீடுகளை பூட்டுவதில்லை.
தீவை விட்டு வெளியில் செல்ல படகு சவாரியை மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இங்குள்ள பள்ளிக்கூடத்தில் 10ஆம் வகுப்பு வரை பாடம் நடத்தப் படுகிறது.
அதற்கு மேல் கல்வி கற்க நினைக்கிறவர்கள் வெளியூர்களுக்கு செல்கின்றனர். அவர்களிலும் பெரும்பாலானோர் படிப்பு முடிந்ததும் சொந்த ஊருக்கு திரும்பி விடுகின்றனர்.
கடலுக்கு அருகில் வாழ்வதனால் இவர்களின் வாழ்வாதாரமாக இருக்கிறது மீன்பிடி தொழில். மீன், இறால் போன்ற உயிரினங்கள் தான் இவர்களின் பிரதானமான உணவு ஆகும்.
Thanks for Your Comments