ஜெயலலிதா சொத்திலிருந்து டாய்லெட் கட்டலாமே.. நீதிபதி !

0

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் சொத்துகளை ஏலம் விடும் போது கிடைக்கும் பணத்தில், தமிழ்நாட்டில் இலவச கழிவறைகள் கட்டலாமே என தமிழ்நாடு அரசுக்கு கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி மோகன் யோசனை தெரிவித்தார்.

ஜெயலலிதா சொத்திலிருந்து டாய்லெட் கட்டலாமே.. நீதிபதி !
மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கு தொடர்பாக ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோரிடம் இருந்து பல சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டன. 

இதனை ஏலம் விடுவது தொடர்பான வழக்கு பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு நீதிபதி எச்.ஏ.மோகன் முன்பு கடந்த ஆகஸ்ட் மாதம் விசாரணைக்கு வந்தது. 

அப்போது, ஏலம் விட வேண்டிய சொத்துக்களின் விபரங்கள் மற்றும் அதனுடைய தற்போதைய மதிப்பு ஆகியவற்றின் விபரங்களை தாக்கல் செய்ய உத்தர விட்டார்.

அதன்படி, இந்த வழக்கு 16ஆம் தேதி சிறப்பு நீதிமன்ற நீதிபதி மோகன் முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழ்நாடு லஞ்ச ஒழிப்பு காவல்துறை சார்பில் துணை கண்காணிப்பாளர் புகழ்வேந்தன் ஆஜரானார். 

அப்போது பினாமி பெயரில் செயல்பட்ட லெக்ஸ் ப்ராப்பர்டி டெவலப்மெண்ட் பிரைவேட் லிமிடேட், சிக்னோரா என்டர்பிரைசஸ் பிரைவேட் லிமிடேட், மெடோ அக்ரோ பார்ம்ஸ் பிரைவேட் லிமிடேட், ராம்ராஜ் அக்ரோ மில்ஸ் பிரைவேட் லிமிடேட், 

ரிவர் வே அக்ரோ பிரைவேட் லிமிடேட், இந்தோ டோதா கெமிக்கல் ஆகிய 6 நிறுவனங்களின் சொத்து பட்டியலை நீதிமன்றத்தில் சமர்பித்தார். அந்த சொத்துக்களின் தற்போதைய சந்தை மதிப்புகளுடன் இருந்தது.

பின்னர் போலீசார் நீதிமன்றத்தில் தெரிவிக்கையில், பினாமி பெயரில் இயங்கி வந்த ரிவர் வே அக்ரோ பிரைவேட் லிமிடேட் நிறுவனத்திற்கு 1200 ஏக்கர் நிலம் உள்ளது. 

இதில், 300 ஏக்கர் நிலம் மட்டும் 2 பேரின் பெயரில் பட்டா செய்யப் பட்டுள்ளது. இதனால் அதனை பறிமுதல் செய்வதற்கு சிறிது கால அவகாசம் வேண்டும். 

மீதமுள்ள அனைத்து சொத்துக்களை பறிமுதல் செய்யும் பணியில் அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர் என்று தெரிவித்தனர்.

மேலும் சென்னை அண்ணா சாலையில் உள்ள கனரா வங்கியின் கிளையில் கடந்த 1996ம் ஆண்டு ஜெயலலிதா தனது பெயரில் 2 வங்கி கணக்குகளில் தலா ரூ.25 லட்சத்தை வைப்பு நிதியாக (Fixed Deposit) வைத்திருந்ததாகவும், 

ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதனை யாரும் உரிமை கோராத காரணத்தினால் இடைநீக்கம் செய்ததாகவும் கனரா வங்கி தரப்பில் சட்ட ஆலோசகர் ஸ்ரேயா தெரிவித்தார். 

கனரா வங்கி கணக்குகளை மீட்டெடுத்து வட்டியுடன் சேர்த்து பெங்களூர் நீதிமன்ற பதிவாளர் பெயரில் மாற்றி கொடுக்க வேண்டும் என நீதிபதி அதிரடியாக உத்தர விட்டார்.

அதோடு அபராத தொகை, வழக்கு செலவு போக மீதமுள்ள தொகையை வைத்து தமிழ்நாட்டில் கழிவறைகள் கட்டலாமே எனவும் நீதிபதி மோகன், தமிழ்நாடு அரசுக்கு யோசனை தெரிவித்தார். 

அதற்கு, தமிழ்நாடு அரசின் தலைமை வழக்கறிஞர், இந்த வழக்கில் உச்சநீதிமன்றம் ஏற்கனவே கூறியுள்ளபடி தான் செயல்பட முடியும். அதை விடுத்து வேறு உத்தரவு பிறப்பிக்க முடியாது எனப் பதில் அளித்தார்.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings