நம்முடைய இந்தியாவின் அண்டை நாடான நேபாளம் உலகில் அதிக அளவில் சுற்றுலா பயணிகள் வந்து செல்லும் நாடுகளில் ஒன்றாக இருந்து வருகிறது.
இங்கு ஒரு குறிப்பிட்ட அளவிற்கு இந்திய ரூபாயும் செல்லுபடி ஆகும். ஆசிய நாடுகளின் பாரம்பரியத்தை கொண்டுள்ளதால் இந்தியர்களோடு ஒத்துப் போகிறது நேபாளம்.
முஸ்டாங் குகைகள் நேபாளத்தின் ஸ்கை குகைகள் எனவும் அழைக்கப் படுகிறது. இது நேபாளத்தின் முஸ்டாங் மாவட்டத்தில் உள்ள பள்ளத்தாக்குகளின் ஓரங்களில் மனிதர்களால் உருவாக்கப்பட்ட குகைகள்.
தொல்பொருள் ஆராய்ச்சி யாளர்கள் குழுக்கள் இந்த அடுக்கப்பட்ட குகைகளை ஆய்வு செய்து இங்கு குறைந்தது 2,000-3,000 ஆண்டுகள் பழமையான மனித உடல்கள் மற்றும் எலும்புக் கூடுகளை ஓரளவு கண்டறிந்துள்ளனர்.
இந்த குகைகளில் தொல்பொருள் ஆராய்ச்சி யாளர்கள் மேற்கொண்ட ஆய்வுகளில் 12 முதல் 14 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த மதிப்புமிக்க புத்த ஓவியங்கள், சிற்பங்கள், கையெழுத்துப் பிரதிகள் மற்றும் ஏராளமான கலைப்பொருட்கள் கண்டு பிடிக்கப்பட்டன.
அப்பர் மஸ்டாங்கில் காளி கண்டகி ஆற்றின் அருகே செங்குத்தான பள்ளத்தாக்கு சுவர்களில் இந்த குகைகள் அமைந்துள்ளன. இந்த குகைகளை ஆராய்ச்சி குழுக்கள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றன.
ஆனால் இந்த குகைகளை யார் கட்டினார்கள், எதற்காக கட்டப்பட்டது என்பது இதுவரை யாருக்கும் புரியவில்லை. இந்த தளம் தற்போது 1996 முதல் யுனெஸ்கோ தற்காலிக தளமாக பட்டியலிடப் பட்டுள்ளது.
அப்பர் மஸ்டாங் 1992 ஆம் ஆண்டு வரை தடை செய்யப்பட்ட இராணுவ மயமாக்கப்பட்ட பகுதியாக இருந்தது. இது வெளி உலகத்திலிருந்து தனிமைப் படுத்தப் பட்டதன் காரணமாக உலகின் மிகவும் பாதுகாக்கப்பட்ட பகுதிகளில் ஒன்றாக இது இருந்துள்ளது.
இங்கிருந்து ஏராளமான அரைகுறையாக மம்மி செய்யப்பட்ட மனித உடல்களை கண்டுபிடித்தனர். இவை அனைத்தும் குறைந்தது 2,000 ஆண்டுகள் பழமையானவை.
2010 ஆம் ஆண்டில் மலையேறுபவர்கள் மற்றும் தொல்பொருள் ஆராய்ச்சி யாளர்கள் குழு சாம்ட்சோங்கிற்கு அருகிலுள்ள இரண்டு பெரிய குகைகளில் 27 மனித எச்சங்களை கண்டுபிடித்தனர்.
இந்த எலும்புக் கூடுகள் 3 ஆம் நூற்றாண்டு முதல் 8 ஆம் நூற்றாண்டு வரை வாழ்ந்தவர்களின் எலும்புக் கூடுகள் என தெரிய வந்துள்ளது.
இது பௌத்த மதம் முஸ்டாங்கிற்கு வருவதற்கு முன்பு உள்ளவை. இங்கு கண்டெடுக்கப்பட்ட மனித எலும்புகளில் ஆயுதம் கொண்டு வெட்டப்பட்டதன் அடையாளம் இருந்துள்ளது.
அதனால் இந்த இடம் மனிதர்கள் இறந்த பிறகு அவர்களை அடக்கம் செய்வதற்கான சடங்கு முறைகள் செய்யப்படும் இடமாக இருக்கலாம் எனவும் ஆய்வாளர்கள் நம்புகிறார்கள்.
இதற்குக் காரணம் இன்றைக்கும் முஸ்டாங்கில் ஒருவர் இறந்தால் அவருடைய உடல் சிறிய துண்டுகளாக வெட்டப்பட்டு கழுகுகளுக்கு உணவாக போடப்படுகிறது.
2007 ஆம் ஆண்டில், யுனைடெட் ஸ்டேட்ஸ், இத்தாலி மற்றும் நேபாளத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் 13 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த லோ மந்தாங்கிற்கு அருகிலுள்ள முஸ்டாங் குகைகளில்
பண்டைய பௌத்த அலங்காரக் கலை மற்றும் ஓவியங்கள், கையெழுத்துப் பிரதிகள் மற்றும் மட்பாண்டங்களைக் கண்டுபிடித்தனர்.
2008 ஆம் ஆண்டு அவர்களின் இரண்டாவது பயணத்தில் 600 ஆண்டுகள் பழமையான பல மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப் பட்டன. விலை மதிப்பற்ற கையெழுத்துப் பிரதிகள் மீட்கப்பட்டன.
கிமு 1,000 ஆம் ஆண்டிலேயே குகைகள் புதை குழிகளாகப் பயன்படுத்தப் பட்டன. 10 ஆம் நூற்றாண்டின் போது இப்பகுதியில் அடிக்கடி சண்டை நடைபெற்றதாக கருதப்படுகிறது.
அதன் காரணமாக பாதுகாப்பை காரணமாக கொண்டு பல குடும்பங்கள் இந்த குகைகளுக்குள் நுழைந்து அவற்றை குடியிருப்புகளாக மாற்றியது.
1400 களில், குகைகள் தியான அறைகள், இராணுவ கண்காணிப்பு, சேமிப்பு இடங்கள் என மக்கள் இங்கு வந்துள்ளனர்.
Thanks for Your Comments