நான்கு தேசிய விருது வாங்கி விட்டேன். ஆனாலும் அதை விட பத்திரமாய் பொக்கிஷமாய் அந்த கிழவன் கொடுத்த ரெண்டு ரூபாய் நோட்டை பொறுப்புடன் பாதுகாத்து வருகிறேன்.
புறப்பட்ட அடுத்த அரை மணிக்கெல்லாம் நகர எல்லை தாண்டி அடர்ந்த வனப்பகுதிக்குள் நுழைகிறது என் வண்டி. அது பனி படர்ந்த இரவின் தொடக்கமாய் இருக்கும் நேரம்.
அமைதியாய் என் காரில் ஒலி நாடாவை ஒலிக்க விட்டுக் கொண்டு வாகனத்தை செலுத்திக் கொண்டிருந்தேன். அந்த அடர் இருளில் ஒரு மெல்லிய எளிய உருவம். பார்க்க ஒடிசலான வயசான கிழவன்.
கையில் கைவிளக்குடன் தலையில் முக்காடுடன். கைநீட்டி வழிமறித்தான். இந்த ராத்திரி வேளையில் யாரென்னவென தெரியாமல் வண்டியை நிறுத்தி மாட்டிக் கொள்வானேன் என வண்டியை நிறுத்தாமல் போனேன்.
ஒரு அரை கிலோ மீட்டர் போயிருப்பேன். ஆனால் அந்த கிழவனின் கண்ணில் தெரிந்த தவிப்பும் கவலையும் ஒரு கணம் என்னை யோசிக்க வைக்க, வண்டியை திருப்பி மீண்டும் அந்தப் பகுதியை அடைந்தேன்.
அந்தக் கிழவன் அங்கேயே நின்றிருந்தார். எங்கய்யா போகணும்..? என்றேன். இல்லைய்யா.. என் பேத்திக்கு வவுத்து வலி நெறமாச கர்ப்பிணி.. ரொம்ப நேரமா நிக்கிறேன்.
வண்டியே வரலைய்யா...' என்கிறார். 'சரி.. ஏறுங்க..' என சொல்லி இருவரையும் ஏத்திக் கொண்டு ஒரு அரை கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மருத்துவ மனைக்கு விரைகிறேன்.
அந்தப் பெண் கிட்டத்தட்ட மயக்கமுற்ற நிலையிலிருந்தாள். மருத்துவமனை அடைந்ததும் செவிலியர்கள் ஸ்ட்ரெச்சரில் அவசரமாக அந்தப் பெண்ணை ஏற்றிக் கொண்டு மருத்துவ மனைக்குள்ளே விரைந்தனர்.
அப்போது நான் காரை விட்டு இறங்காததால் செவிலியர்களும் என்னை கவனிக்க வில்லை. பிறகு அந்தக் கிழவன் 'ரொம்ப நன்றிய்யா.. அவசரத்துக்கு உதவின.
இந்தா, இத டீ செலவுக்கு வச்சிக்க...' என என் கையிலொரு நோட்டை திணித்தார்.
அந்த ஓட்டை ஒடிசலான எந்த கடையிலும் சிங்கிள் டீ கூட குடிக்க முடியாத செல்லாத ரெண்டு ரூபாய் நோட்டை பார்த்து விட்டு அவரை ஒரு முறை மீண்டும் பார்க்க.. அவரோ 'சும்மா வச்சுக்கய்யா..' என்றபடி மருத்துவ மனைக்குள் போய் சட்டென மறைந்து விட்டார்.
ஆனாலும் அதை விட இன்னும் பத்திரமாய் பொக்கிஷமாய் அந்த ரெண்டு ரூபாய் நோட்டை பாதுகாத்து வருகிறேன்.
Thanks for Your Comments